இத்தலபுராணம் நிரம்ப அழகிய தேசிகரால் (சேது புராணம்) பாடப்பட்டுள்ளது. சொக்கநாதப் புலவர் ‘தேவையுலா’ பாடியுள்ளார். கிழக்குக் கோபுரம் பிரதான வாயில். பிரதான வாயில் முகப்பில் உள்ள சேதுபதி மண்டபம் சிற்ப வேலைப்பாடுகள் உடையது. உட்புகும்போது ஆஞ்சநேயர் சந்நிதி உளது. உள்ளே சென்றால் பெரிய சுதையாலான நந்தி தரிசிக்கத்தக்கது. இருபுறமும் மதுரை அரசர்களான விசுவநாத நாய்க்கர், கிருஷ்ணப்ப நாய்க்கர் உருவங்கள் உள்ளன. கோயிலுக்குள் உள்ள தீர்த்தங்கள் அனைத்தும் கிணறுகள் வடிவில் உள்ளன. நீரை முகந்து எடுத்தே நீராட வேண்டும். அக்கினி தீர்த்தத்தில் (கடலில்) நீராடி, நேரே கோயிலுக்குள் வந்து முறையாக வரிசையாக எல்லாத் தீர்த்தங்களிலும் நீராடுவர். கோயில் பிராகாரங்களில் நீராடிச் சுற்றுவோர் கூட்டமும் தண்ணீர் ஈரமும் எப்போதும் இருக்கும். மூலவர் சிவலிங்க மூர்த்தி. சிறிய திருமேனி. கங்கா ஜலம் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. பாண்டாக்கள் பூஜைகளைச் செய்கின்றார்கள். அம்பாள் சந்நிதி வலப்பால் உள்ளது. நின்ற கோலம் - அழகான திருமேனி - தனிக்கோயில். இத்திருக்கோயிலில் உள்ள பிற சந்நிதிகள் வருமாறு :- 1. விசுவநாதர், விசாலாட்சி 2. பள்ளிகொண்ட பெருமாள் 3. சந்தான கணபதி 4. மகாகணபதி 5. முருகர் 6. சேதுமாதவர் 7. சபாபதி (நடராசர்) 8. ஆஞ்சநேயர் 9. மகாலட்சமி 10. நந்திதேவர் முதலியன. இங்குள்ள தீர்த்தங்களுள் உயர்வானது ‘கோடி’ தீர்த்தமாகும். இஃது கிணறு வடிவில் உட்புறத்தில் அமைந்துள்ளது. நீராடுவோர் வெளியே இருந்து தீர்த்தத்தை ஏற்றுக்கொள்ள கோமுகம் அமைக்கப்பட்டுள்ளது. ‘காசி - இராமேஸ்வரம்’ என்னும் பேச்சு வழக்கிலிருந்து இத்தலத்தின் மேன்மையை அறியலாம். வாழ்நாளில் ஒவ்வொருவரும் இவ்யாத்திரையைத் தவறாமல் பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு செல்வோர் முதலில் இராமேஸ்வரம் வந்து கடல் நீராடி இராமநாதரைத் தொழுது, இங்கிருந்து (கடல்) மண்ணையெடுத்துக் கொண்டு - காசி சென்று, கங்கையிற் கரைத்து, கங்கையில் நீராடி விசுவநாதரைத் |