இறைவன் - ஆதிரத்னேஸ்வரர், அஜகஜேஸ்வரர். இறைவி - சிநேகல்லி, அன்பாயிரவல்லி. தலமரம் - வில்வம் தீர்த்தம் - க்ஷீரகுண்டம், வருணதீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம் முதலானவை. சம்பந்தர் பாடல் பெற்றது. இத்தலத்தின் வேறு பெயர்கள் - பாரிசாதவனம், வன்னிவனம், வில்வவனம், ஆதிரத்னேஸ்வரம், மார்க்கண்டேயபுரம், கோமுத்தீசம், விஜயேச்சரம் என 12 பெயர்கள் சொல்லப்படுகின்றன. இத்திருக்கோயிலின் கோபுரம் மிக மிக உயரமானது. மநு, மாந்ததா, அர்ச்சுனன், வருணன், காமதேனு, சூரியன், அகத்தியர், வாருணி முதலியோர் வழிபட்ட சிறப்புடையது. அருணகிரியார் இத்தலத்துப் பெருமானைப் பாடியுள்ளார். ராஜகோபுரம் ஒன்பது நிலைகளை பெற்று 130 அடி உயரமுடன் கம்பீரமாகக் கிழக்கு நோக்கியுள்ளது. விநாயகர், முருகன், சோமாஸ்கந்தர், இலக்குமி சந்நிதிகள் உள்ளன. நடராசசபை உள்ளது. அம்பாள் கிழக்கு நோக்கிய திருக்கோலம் - சதுர்ப்புஜக் காட்சி. மூலவர் - சிவலிங்கத் திருமேனி, ரத்னேஸ்வரர் தரிசனம், இம்மூர்த்தி நீலக்கல்லில் ஆவுடை சேர்க்கப்பட்டுக் காட்சி தருகிறார். நீல நிற ரத்தினத்தால் இம்மூர்த்தியைச் செய்து சூரியன் வழிபட்டதாக வரலாறு சொல்லப்படுகிறது. இக்கோயில் இராமநாதபுரம் ராஜா சேதுபதி குடும்பத்தினரின் பரம்பரை அறங்காவலர் ஆட்சிக்குட்பட்டதாக விளங்குகிறது. தற்போதுள்ள இராமநாதபுரம் இராணி திருமதி. இந்திராதேவி அவர்களே பரம்பரை அறங்காவலராக உள்ளார். நாடொறும் ஆறுகால பூசைகள் முறையாக நடைபெறுகின்றன. வைகாசி விசாகத்தில் பெருவிழா பத்து நாள்களும் ஆடிப்பூர உற்சவம் 15 நாள்களும் நடைபெறுகின்றன. ஆடிசுவாமி, திருக்கல்யாணத்தபசு முதலிய விழாக்களும் விசேஷமானவை. தலபுராணம் திருவாரூர் சாமிநாத தேசிகரால் பாடப்பட்டுள்ளது. மாசி மாதத்தின் பிற்பகுதியில் சுவாமி, அம்பாள் திருமேனிகளில் சூரிய கிரகணங்கள் படுவது அற்புதமான காட்சியாகும். அண்மையில் உள்ள தலங்கள் திருப்புனவாயில், தேவிபட்டணம் முதலியன. |