பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 77


அமைந்த பழைமையான தேரைக் காணலாம். இத்திருக்கோயில் திருப்பணி
நிறைவாகி 1983ல் குடமுழுக்கு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்கிறது.

     இறைவன் - வடாரண்யேசுவரர், தேவர்சிங்கப் பெருமான்,
               ஆலங்காட்டு அப்பர்.
     இறைவி - பிரம்மராளகாம்பாள், வண்டார்குழலி
     தலமரம் - பலா, ஆலமரம் என்றும் சொல்லப்படுகிறது.

     தீர்த்தம் - ‘சென்றாடு தீர்த்தம்’ (“செங்கச்ச உன்மத்ய மோக்ஷ
புஷ்கரணி”) முக்தி தீர்த்தம். மிகப் பெரிய குளம். கரையில் நடனமாடித்
தோற்ற காளியின் உருவம் உள்ளது.

மூவர் பாடல் பெற்ற தலம்.

     கோயிலின் முன்னால் பதினாறுகால்  மண்டபம்  உள்ளது.  முகப்பு
வாயிலில் வரசித்தி விநாயகரும், ஊர்த்துவ தாண்டவமும், ரிஷபாரூடரும்,
முருகனும், காளியும் உள்ள சுதை சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
உள் நுழைந்தால் நான்குகால் மண்டபம் உள்ளது.  உள்கோபுரம்   ஐந்து
நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வலப்பால்
சித்த வைத்திய சாலை நடைபெறும் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இம்
மருத்துவச்சாலை தேவஸ்தானச் சார்பில் நடைபெறுகிறது. திங்கள், வியாழன்
காலை வேளைகளில் மக்கள் வந்து மருத்துவம் பெற்றுச் செல்கின்றனர். இம்
மண்டபத்தில்தான் நடராசர் அபிஷேகம் நடைபெறுகிறது.

     கோபுர வாயிலில் வல்லபை விநாயகர் துதிக்கையுள்ளிட்ட பதினோரு
கரங்களுடன் காட்சி தருகின்றார். மறுபுறம் வள்ளி தெய்வயானையுடனாகிய
ஆறுமுகர் சந்நிதி.

     வெளிப் பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. சந்தன மரங்கள் உள்ளன.
கோபுரவாயில்  நுழைந்ததும்  செப்புக்  கவசமிட்ட  கொடிமரம்   உள்ளது.
வலப்பால் துவஜாரோகண (கொடியேற்ற) மண்டபம், இடப்பால் சுக்கிரவார
மண்டபம்.

     அடுத்துள்ள உள் கோபுரம் மூன்று நிலைகளையுடையது. கோபுரத்தில்
ஊர்த்துவ  தாண்டவம்,    பிரம்மா,    நந்தி    மத்தளம்    வாசித்தல்,
காரைக்காலம்மையார்   பாடுதல்,   ரிஷபாரூடர்,     கஜசம்ஹாரமூர்த்தி,
காரைக்காலம்மையார்   வரலாறு   முதலியவை   சுதையில்  சிற்பங்களாக
அமைக்கப்பட்டுள்ளன.