பக்கம் எண் :

772 திருமுறைத்தலங்கள்


     என்பது வரலாறு. நந்தியிடம் சாபம் பெற்ற ஐராவதம் இங்கு வந்து
ஆனைமடு என்னும் தீர்த்தத்தில் நீராடிச் சோமேசரையும் காளீசுவரரையும்
வழிபட்டுச் சாபம் நீங்கப் பெற்றதாகவும் வரலாறு சொல்லப்படுகிறது. சுந்தரர்,
சேரமானுடன் திருச்சுழியல் தலத்தை வணங்கி, இரவு துயிலும்போது அவர்
கனவில் காளைவடிவம் தாங்கிக் கையில் பொற்செண்டு பிடித்துத் திருமுடியில்
சுழியும் அணிந்து காட்சிதந்து, “யாம் இருப்பது கானப்பேர்” எனக்கூறி மறைய,
துயிலுணர்ந்த சுந்தரர், சேரர் பெருமானுடன் இத்தலத்திற்கு வந்து பணிந்து
பதிகம் பாடிப் பரவினார்.

     பதினோராந் திருமுறை திருக்கண்ணப்பர் திருமறம், கபிலதேவநாயனார்
சிவபெருமான் அந்தாதி, பரணதேவ நாயனார் அந்தாதி, திருவிளையாடற்
புராணம் அருச்சனைப் படலம், அருணகிரியாரின் திருப்புகழ் முதலியவற்றில்
இத்தலம் குறிப்பிடப் பெறுகின்றது.

     இத்தலத்துக் கல்வெட்டுக்கள் மூலம் - தளியிலார், தேவரடியார்
முதலியோர்களைப் பற்றியும், ஆடல்வல்லோர்க்குத் ‘தலைக்கோல்’ பட்டம்
அளிக்கப்பெற்ற செய்தியும் அறியமுடிகிறது.

     நாடொறும் ஆறுகால வழிபாடுகள். இங்கு வேதாந்த மடாலயம் ஒன்று
உள்ளது.

     “பிடியெலாம் பின்செலப் பெருங்கை மா மலர்தழீஇ
     விடியலேதடமூழ்கி விதியினால் வழிபடும்
     கடியுலாம் பூம் பொழில் கானப்பேர் அண்ணல்நின்
     அடியலால் அடைசரண் உடையரோ அடியரே.”     (சம்பந்தர்)

     “தொண்டர் தமக்கெளிய சோதியை வேதியனைத்
          தூய மறைப் பொருளா நீதியை வார்கடனஞ்
     சுண்டதனுக் கிறவா தென்று மிருந்தவனை
          யூழிபடைத்தவனோ டொள்ளரியும் முணரா
     அண்டனை அண்டர் தமக்காகமநூன் மொழியும்
         மாதியை மேதகுசீ ரோதியை வானவர்தம்
     கண்டனை அன்பொடு சென்றெய்துவ தென்று கொலோ
          கார்வயல் சூழ் கானப் பெருறை காளையையே.”
                                              (சுந்தரர்)

     “சரதவேதம் பரவு புனவாயின கருந்தவசித்தர்
     இரதவாதஞ் செய்து சிவனுருவங் கண்ட வெழினகரும்
     வரதனாகி அரனுறையும் கானப்பேரு மலைமகளை
     விரதயோக நெறிநின்று மணந்தார் சுழியல் வியனகரும்
                             (திருவிளை, புரா- அர்ச்.பட)