நாடொறும் முறையாகப் பூஜைகள் நடைபெறுகின்றன. நல்ல பராமரிப்பு. பங்குனியில் பெருவிழா நடைபெறுகிறது. காசிக்குச் சமமான தலங்களுள் ஒன்றாக விளங்கும் இத்தலத்திற்குக் கந்தசாமிப் புலவர் தலபுராணம் பாடியுள்ளார். திருப்பூவணநாதர் உலாவும் மிகச் சிறப்பான நூல். கோனேரின்மைகொண்டான் குலசேகரதேவன் காலத்திய கல்வெட்டுக்கள் இத்தலத்திற்கு வேதபாராயணத்திற்கும், விழாக்களுக்கும் நிவந்தங்கள் அளித்த செய்திகளைத் தெரிவிக்கின்றன. “நன்றுதீது என்று ஒன்றிலாத நான்மறையோன் கழலே சென்று பேணி ஏத்த நின்ற தேவர் பிரான் இடமாம் குன்றில் ஒன்றியோங்க மல்கு குளிர் பொழில் சூழ் மலர்மேல் தென்றல் ஒன்றி முன்றிலாருந் தென்திருப் பூவணமே” (சம்பந்தர்) ‘வடிவேறு திரிசூலந்தோன்றும் தோன்றும் வளர்சடை மேல் இளமதியம் தோன்றும் தோன்றும் கடியேறு கமழ் கொன்றைக் கண்ணி தோன்றும் காதில் வெண் குழைதோடு கலந்து தோன்றும் இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில்திகழும் திரு முடியும் இலங்கித் தோன்றும் பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.’ (அப்பர்) ‘எண்ணியிருந்து கிடந்து நடந்தும் அண்ணல் எனாநினைவார் வினைதீர்ப்பார் பண்ணிசையார் மொழியார் பலர் பாடப் புண்ணியனார் உறை பூவணம் ஈதோ’ (சுந்தரர்) - மோனருளே பூவணமும் பூமணமும் போல அமர்ந்ததிருப் பூவணத்திலானந்தப் பொக்கிஷமே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. பூவணநாதர் திருக்கோயில் திருப்பூவணம் & அஞ்சல் 623 611 இராமநாதபுரம் மாவட்டம். |