256/12. திருச்சுழியல் திருச்சுழி | பாண்டிய நாட்டுத் தலம். மக்கள் வழக்கில் திருச்சுழி என்றும், கொச்சையாகத் திருச்சுளி என்றும் வழங்குகிறது. இராமநாதபுரம், பரமக்குடி, அருப்புக்கோட்டை பேருந்துச் சாலையில் உள்ள தலம். அருப்புக்கோட்டையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. கோயில்வரை வாகனங்களில் செல்லலாம். மதுரை, மானாமதுரை, விருதுநகர் முதலிய ஊர்களிலிருந்தும் பேருந்துகளில் செல்லலாம். விருதுநகர் - மானாமதுரை இருப்புப் பாதையில் உள்ள ரயில்நிலையம். இத்தலத்துக்குரிய வேறு பெயர்கள் - வயலூர், முத்திபுரம், ஆவர்த்தபுரம், சூலபுரம், அரசவனம், சுழிகை, சுழிகாபுரி என்பன. சிவபெருமான் ஒருசமயம் பிரளயத்தைச் சுழித்துப் பூமிக்குள் புகச் செய்தார் ஆதலின் (திருச்)சுழியல் என்று பெயர் பெற்றது. மிகப் பழமையான தலம். இறைவன் - திருமேனிநாதர், சுழிகேசர், பிரளயவிடங்கர், தனுநாதர், மணக்கோலநாதர், கல்யாணசுந்தரர், புவனேஸ்வரர், பூமீஸ்வரர், (“செற்றார் திருமேனிப் பெருமானூர்” என்பது இத்தலத்துத் தேவாரத் தொடர்) இறைவி - துணைமாலையம்மை, சகாயவல்லி, சொர்ணமாலை, முத்துமாலையுமையாள், மாணிக்கமாலை. தலமரம் - அரசு, புன்னை. தீர்த்தம் - 1. பாவகரி நதி (கௌண்டின்ய ஆறு (அ) குண்டாறு) 2. கவ்வைக்கடல் (ஒலிப்புணரி)-சந்நிதிக்கு எதிரில் உள்ளது. இத்தீர்த்தம் சுந்தரர் தேவாரத்தில் சிறப்பிக்கப் பெறுகிறது. சிவபெருமான் பிரளயத்தைச் சுழித்து இத்தீர்த்தத்தில் புகச்செய்தார் என்பது தலவராறு. 3. பூமி தீர்த்தம் :- சந்நிதிக்கு எதிரில் ஆற்றுக்குச் செல்லும் வழியில் உள்ளது. |