4. சூலதீர்த்தம் :- கவ்வைக்கடல் மைய மண்டபத்தின் பின் உள்ளது. இவை தவிர, பிரமதீர்த்தம், ஞானவாளி முதலியவையும், அருச்சுனன் தீர்த்த யாத்திரையாகப் புறப்பட்டுப் பாண்டிய நாடு வந்து, சித்திராங்கதையை மணந்து அவளுடன் திருச்சுழியல் வந்து இறைவனை வணங்கித் தன் காண்டீவத்தின் முனையால் கல்லி உண்டாக்கிய ‘கோடி தீர்த்தமும்’ (அம்மன் சந்நிதி முன்புள்ள கிணறு) உள்ளன. சுந்தரர் பாடல் பெற்றது. தலவிநாயகர்கள் :- தாவர விநாயகர், போதி விநாயகர், அரசு விநாயகர், வேலடி விநாயகர், தருமதாவரப் பிள்ளையார். தீர்த்தத்தில் (கவ்வைக்கடல்) தூய்மை செய்துகொண்டு ஆலயத்துள் நுழைந்ததும் குடவரை வாயிலில் - கம்பத்தடி மண்டபத்தைக் காண்கிறோம். இதில் பலிபீடம் கொடிமரம் உள்ளன. விநாயகர் சுப்பிரமணியர், சந்நிதிகள் உள. அடுத்துள்ளது ஏழுநிலை கோபுரம். அதிகார நந்தியை வணங்கி உட்புகுந்தால் சுந்தரர் பதிகம் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டுப் பதிக்கப் பட்டுள்ளதைக் காணலாம். அடுத்துள்ளவை சபா மண்டபம், அந்தராள மண்டபம், அர்த்த மண்டபம். அடுத்து மூலஸ்தானம் - திருமேனிநாதர், சுயம்புலிங்கம் மூலவர். சதுர ஆவுடையார். கருவறை அகழி அமைப்பு. சபா மண்டபத்தில் நடராசர் சந்நிதி. நடராசர் மூலவராகச் சிவகாமி, பதஞ்சலி, வியாக்ரபாதருடன் சிலாரூபத்தில் பிரபையுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார். உற்சவமூர்த்திகள் தரிசனம். முதற் பிராகாரத்தில் - நாயக மண்டபப் பிராகாரத்தில் உஷா, பிரத்யுஷா சமேத சூரியன், அறுபத்துமூவர், சந்தானாசாரியர், சப்தமாதர்கள் சந்நிதிகள் உள்ளன. நடராசர் சந்நிதிக்கு எதிரில் கௌதமர், அகலிகை உருவங்கள் உள்ளன. உற்சவ மூர்த்தங்களிலும் இவ்விரு வடிவங்களும் உள. சோமாஸ்கந்தர், காசிவிசுவநாதர், சுழிகைக் கோவிந்தர், பூமி நீளாதேவியும் காட்சி தருகின்றனர். கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், லிங்கோற்பவரும், துர்க்கையும் தரிசனம், சண்டேசுவரருக்கு எதிரில் மேற்புறத்திலிருந்து தண்ணீர் கீழே இறங்குவதற்குக் கருங்கல்லில் குழாய் அமைந்திருப்பது காணத்தக்கது. பிராகாரம் விசாலமானது. மேற்புரத்தில் சித்திர வேலைப்பாடுகள். பிரளயவிடங்களுக்குத் தனிக்கோயில் - தேவகோட்டை செட்டியாரின் திருப்பணி, எதிரில் நந்தவனம்-பழநியாண்டவர் சந்நிதி. வெளிப்பிராகாரத்தில் தல மரமான “புன்னை மரக்கன்று” வைத்து வளர்க்கப்படுகிறது. |