அம்பாள் சந்நிதி வலப்பால் பக்கத்தில் உள்ளது. சந்நிதியின் உட்புறத்தில் அம்பாளுக்கு எதிரில் உள்ள மண்டபத்தின் மேற்புறத்தில் ஸ்ரீ சக்கரம் கல்லில் வடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. கருவறை அகழி அமைப்பு - மேற்புறத்தில் சுற்றிலும் சாரங்கள். அம்பாள் திரிபங்கி லட்சண அமைப்பில், இடுப்பு, கழுத்து, இடக்கால் சற்று சாய்ந்து நடன அமைப்பில் தரிசனம். திருமால், இந்திரன், பிரமன், சூரியன், பூமிதேவி, கௌதமர், அகலிகை, கண்வமுனிவர், அருச்சுனன், சித்திராங்கதை, சேரமான் பெருமான் முதலியோர் வழிபட்ட தலம். திருவண்ணாமலையில் தங்கி அருள் மழை பொழிந்து அவனிக்கு ஞானதீபமாய் விளங்கிய ஸ்ரீரமண மகரிஷி அவதரித்த தலமும் இதுவே. இம்மகான் அவதரித்த இல்லம் கோயிலுக்குப் பக்கத்தில் நினைவாலயமாகப் போற்றப்பட்டு வருகின்றது. அங்கு அவருடைய படமும், பாதுகையும் வைத்து வழிபடப் பெறுகிறது. தலத்தை வழிபடுவோர் இங்கும் சென்று தரிசிக்க வேண்டும். திருச்சுழியல், மதுரை, இராமேஸ்வரம் ஆகிய மூன்று கோயில்களும் ஒரே அமைப்புடைய கட்டுமானம் என்பர். பராக்கிரம பாண்டியன் காலத்திய கல்வெட்டுகளிலிருந்து இக்கோயில் கருவறை அவனால் கட்டப்பட்டது என்று தெரிகிறது. பிற்காலத்தில் நகரத்தார், கருவறை நீங்கலான பிற பகுதிகளைப் பிரித்துப் பல நிலைகளில் திருப்பணிகளைச் செய்துள்ளனர். நாடொறும் பூசைகள் குறைவின்றி நடைபெறுகின்றன. நவராத்திரி, ஆவணி மூலம், சித்திரை விஷு , கார்த்திகைச் சோமவாரங்கள், ஆடித்தவசு, தைப்பூசம் முதலிய உற்சவங்கள் நடைபெறுகின்றன. பங்குனி மாதத்தில் கௌதமருக்குத் திருமணக்காட்சி, சித்ரா பௌர்ணமி புறப்பாடு முதலியவை விசேஷம். திருச்சுழியற்புராணம் - தலபுராணம் உள்ளது. தவிர திருச்சுழியல் வெண்பா, அந்தாதி, திருச்சுழியல் கொம்பிலா வெண்பா, திருசூலபுர மகாமித்யம், துணைமாலையம்மை, பிள்ளைத்தமிழ், திருச்சுழியல் கயிற்றுப் பின்னல் முதலிய நூல்களும் உள்ளன. “ஊனாய் உயர்புகலாய் அகலிடமாய் முகில் பொழியும் வானாய் வருமதியாய் வீதி வருவானிடம் பொழிலின் தேனா தரித்திசை வண்டின மிழற்றுந் திருச் சுழியல் நானா விதநினைவார்தமை நலியார் நமன் தமரே.” |