பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 781


     இறைவன் - குற்றாலநாதர், குறும்பலாஈசர், திரிகூடாசலபதி,
               திரிகூடாசலேஸ்வரர்.
     இறைவி - குழல்வாய்மொழியம்மை, வேணுவாக்குவாஹினி.
     தலமரம் - குறும்பலா.
     தீர்த்தம் - வடஅருவி.

     சம்பந்தர் பாடல் பெற்ற பதி.

     இறைவனுக்குரிய பஞ்ச சபைகளில் இத்தலம் சித்திரசபை. பட்டினத்தார்,
மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் ஆகியோர் பாடல்களில் இத்தலம்
சிறப்பிக்கப்படுகின்றது. அப்பர், தாம் பாடிய திருவங்கமாலையில்
இத்தலத்தைக் குறித்துள்ளார். மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயர் அவர்கள்
இத்தலத்திற்குத், திருக்குற்றாலத் தலபுராணம் மற்றும் குறவஞ்சி முதலிய
பிரபந்தங்களும் பாடியுள்ளார். இதன் அருகில் ‘இலஞ்சி, ‘பண்பொழி’ முதலிய
முருகன் தலங்களும் தென்காசி சிவத்தலமும் உள்ளன.

     திருமால் வடிவில் இருந்த மூர்த்தியை அகத்தியர் சிவலிங்கத்
திருமேனியாக மாற்றிய தலம். கோயில், மலைகள் சூழ்ந்த இயற்கையழகு
வாய்ந்த சூழலில் மலையடிவாரத்தில் உள்ளது. இங்குள்ள மலைத்தொடர்
‘திரிகூடமலை’ என்றழைக்கப்படுகிறது. கோயிலுக்குப் பக்கத்தில் பேரருவி
வீழ்கின்றது. கோயிலுக்குப் பக்கத்தில் செல்லும் பாதை வழியே சென்றால்
ஐந்தருவியைக் காணலாம். மலை உயரத்தில் சண்பக அருவி, செண்பகாதேவி
கோயில், தேனருவி, புலியருவி முதலிய பல அருவிகள் உள்ளன. ஜு ன் மாத
இறுதி, ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் அருவிகளில் நீர் பொழிய, அவைகளில்
நீராடி நலம்பெற ஆயிரக்கணக்கில் மக்கள் இத்தலத்திற்கு வருவர். குற்றால
அருவியிற் குளித்தல் உடலுக்குச் சுகத்தைத் தரும். குளிப்பதற்குரிய வசதிகள்
செய்து தரப்பட்டுள்ளன.

     கோயில் சங்கு வடிவில் அமைந்துள்ளது. சிறிய ராஜகோபுரம்
முக்கலசங்களுடன் முகப்பில் காட்சி தருகிறது. களிற்று படிகளேறி 2000-
ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையுடைய குற்றாலநாதர் கோயிலுள்
நுழைந்தால் மிக விசாலமான மண்டபம் உள்ளது. தூண்களின் வரிசையமைப்பு
அழகுடையது. இக்கல்மண்டபம் வசந்த மண்டபம் எனப்படுகிறது.
மண்டபத்தின் நடுவில் உயர்ந்த யாகசாலை மேடையும் ஒரு மூலையில்
தீர்த்தவாரி மண்டபமும் உள்ளன. நுழைவு வாயிலில் இருபுறமும் உள்ள
அம்பலவிநாயகரையும்,