ஆறுமுக சுவாமியையும் வணங்கி நுழைந்தால் நேரே மூலவர் சந்நிதி தெரிகின்றது. அலங்கார மண்டபம் நுழைந்து வலமாகச் சுற்றித் துவார பாலகர்களைக் கடந்து, மிகக் குறுகலான பிராகாரத்தை வலம் வரும் போது, அதிகார நந்தி, சூரியன், கும்பமுனி மற்றும் அருட்சத்தியர்கள், எதிரில் கோஷ்ட மூர்த்தமாகவுள்ள தட்சிணாமூர்த்தி, விநாயகர் முதலிய சந்நிதிகளைத் தரிசிக்கலாம். பஞ்சபூதலிங்கங்களும், சுப்பிரமணியர், சனிபகவான் சந்நிதிகளும் உள. கருவறைச் சுவரின் வெளிப்புறத்தில் கல்வெட்டுக்கள் உள்ளன.கோயில் கற்றளி, பிராகாரம் பிற்காலத்தில் அமைக்கப்பட்ட தெனத் தெரிகிறது. மகாமண்டபத்தில் வலப்பால் நடராசர் திருமேனி உள்ளது. மூலவர் சிவலிங்கத் திருமேனி - மிகச் சிறிய லிங்கம். அகத்தியரால் சிவத் திருமேனியாக மாற்றப்பட்டதாதலின் திருமேனியின் மீது அகத்தியரின் ஐந்து விரல்களும் பதிந்துள்ளன. திருமால் திரு மேனியைச் சிவத்திருமேனியாகவும், ஸ்ரீ தேவியைக் குழல்வாய்மொழி யம்மையாகவும், பூதேவியைப் பராசக்தியாகவும் மாற்றியதாக ஐதீகம். சுவாமி கிழக்கு நோக்கியுள்ளார். சுவாமிக்கு வலப்பால் அம்பாள்- குழல்வாய்மொழியம்மை சந்நிதி உள்ளது. இதுவும் கிழக்கு நோக்கிய சந்நிதியே. படிக்கட்டுகள் ஏறி உள்நுழைய வேண்டும். நுழைவு வாயிலில் உள்ள வாயில் தூணில் உள்ள கல்வெட்டுக் குறிப்பொன்று, அம்பாள் கோவில் திருப்பணி கொல்லமாண்டு 1108ல் (ஸ்ரீமுக ஆண்டு - ஆனி-19) பூர்த்தி செய்யப்பட்டுத் தேவகோட்டை காசி விசுவநாத செட்டியார் அவர்களால் மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்ட செய்தியை தெரிவிக்கின்றது. விசாலமான சந்நிதி. வலப்பால் பள்ளியறை. அம்பாள் நின்ற கோலம். உள்பிராகாரத்தை வலம் வரும்போது கைலாசநாதர், துர்க்கை சந்நிதிகள் உள்ளன. அம்பிகையை வழிபட்டு வெளிவந்து வலமாக வரும்போது தலமரமான குறும்பலா (புதிய தலமரம்) உள்ளது. அதற்கு எதிரில் பிராகாரத்தில் ஆதிகுறும்பலா மரத்தின் கட்டைகள் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளன. அதையடுத்து அறுபத்து மூவர் மூலத்திருமேனிகள், நன்னகரப் பெருமாள் சந்நிதி, பாபவிநாசர் உலகாம்பாள், நெல்லையப்பர் காந்திமதி, நாறும்புநாதர், சங்கரலிங்க நாதர், பால் வண்ணநாதர் ஒப்பனை அம்பாள், சொக்கலிங்கர், ஐயனார், மதுநாதேசுவரர், அறம் வளர்த்த நாயகி சந்நிதிகள் உள்ளன. எதிர்ப்புறத்தில் அருவியைப் பார்க்குமிடத்தைக் குறித்துள்ளனர். அங்கிருந்து பார்த்தால் பேரருவி விழுவது தெரிகிறது. சோழலிங்கம், அகத்தியர், வாசுகி, மகாலிங்கம், சஹஸ்ரலிங்கம் முதலியவைகளும் உள்ளன. |