வலமாக வரும்போது அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படும் ‘பராசக்தி பீடம்’ உள்ளது. இங்கு மகாமேரு உள்ளது. பைரவர் சந்நிதி உள்ளது. குற்றாலமலை 5134 அடி உயரம். வடஅருவி 288 அடி உயரத்திலிருந்து வீழ்கிறது. மகுடாகம முறைப்படிப் பூசைகள் நடைபெறும் இத்திருக்கோயிலில் தைமகம் தெப்போற்சவம், மார்கழித் திருவாதிரை, சித்திரை விஷு உற்சவங்கள் சிறப்புடையன. சித்திர சபை, கோயிலுக்குப் பக்கத்தில் தனிக்கோயிலாக உள்ளது. எதிரில் தெப்பக்குளம் - நடுவில் மணிமண்டபம். சபா மண்டபத்தில் நுழைந்தால் குறவஞ்சி சிலைகளின் அருமையான காட்சி. கீழே கல்பீடம், மேலே முன்மண்டபம் மட்டும் மரத்தால் ஆனது. விமானம் செப்புத்தகடு. எட்டு கலசங்கள் உச்சியில். இச்சித்திர சபையின் வெளிச்சுற்றில் ஊர்த்துவதாண்டம், பத்திரகாளி, முருகன், சூரபத்மன், சிங்கமுகன், தாரகன், மன்மதன், ரதி ஆகிய உருவங்கள் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. முன் மண்டபத்தின் உட்புறத்தில் மேற்புறத்தில் உள்ள கொடுங்கைகளின் அழகு கண்டின் புறத்தக்கது. சபையின் உட்சுற்றில் துர்க்கையின் பல்வேறு வடிவங்கள், வீரபத்திரர், கஜேந்திரமோட்சம், திருவிளையாடற்புராண வரலாறுகள், அறுபத்துமூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்தகோலம், இரணிய சம்ஹாரம், பைரவரின் பல்வேறு உருவங்கள், சனிபகவான் ஆகியவை வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. இவை காலப்போக்கில் அழிந்தாற்போல் உள்ளன. சபையின் உள்ளே - சித்திரசபையாதலின் - நடராசர் உருவம் சிவகாமியுடன், தேவர்கள் தொழுமாறு அழகாக வண்ணத்தில் (சித்திரமாக) வரையப்பட்டுள்ளது. பார்வதி கல்யாணச் சிற்பமும் அழகு. மரத்தூபியில் கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. குற்றாலநாதர் அகத்தியருக்குக் காட்சி தந்தது, சுப்பிரமணியரின், விநாயகரின் பல்வகைச் சிற்பங்கள் முதலான ஏராளமான சிற்பங்கள் இச்சபையில் உள்ளன. இச்சபை கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே இருக்கும் நடராச சிற்பம் தெற்கு நோக்கியுள்ளது. ஆலயப்பெருவிழாவில் எட்டாந்திருவிழாவில் நடராசர், ஆலயத்திலிருந்து இச்சபைக்கு எழுந்தருளி, (பச்சைசார்த்தி) ஆஸ்தானம் திரும்புவது வழக்கம். சுற்றுலாத்தலமாதலின் இங்கு ஏராளமான சத்திரங்களும், உணவுக் கடைகளும் உள்ளன. இக்கோயிலில் 89 கல்வெட்டுக்கள் படி |