பக்கம் எண் :

786 திருமுறைத்தலங்கள்


மதுரையிலிருந்தும், பிறவூர்களிலிருந்தும் மதுரை வழியாகவும் நெல்லைக்கு
அடிக்கடி பேருந்துகள் உள்ளன.

     வேதபட்டர், இறைவனுக்குத் திருவமுது ஆக்குவதற்கு உலரப்
போட்டிருந்த நெல், மழையினால் நனையாதவாறு இறைவன் வேலியிட்டுக்
காப்பாற்றியமையால் இறைவனுக்கு நெல்வேலிநாதர் என்று பெயர் ஏற்பட்டது.
ஆகவே இத்தலம் நெல்வேலி (திருநெல்வேலி) எனப் பெயர் பெற்றது.

     பாற்குடம் சுமந்து சென்ற அன்பனை (முழுதுங்கண்ட ராமக்கோன்)
இறைவன் மூங்கில் வடிவமாக இருந்து இடறச் செய்து பாலைத் தன்மீது
கவிழச் செய்து, அதனால் வெட்டுண்டு, காட்சி தந்தருளியதால் சுவாமிக்கு
வேணுவனநாதர் என்றும் பெயர். இத்தலமும் வேணுவனம் என்று
வழங்கலாயிற்று.

     ஊர்ப்பெயர் :- வேணுவனம், நெல்வேலி, நெல்லூர், சாலிவேலி,
சாலிவாடி, சாலிநகர், பிரம விருந்தபுரம், தாருகாவனம் என்பன. கோயில்
கல்வெட்டுக்களில் இத்தலம் ‘கீழ்வேம்பு நாட்டுக் குலசேகர சதுர்வேதி
மங்கலம்’ என்று காணப்படுகிறது.

     இறைவன் - நெல்லையப்பர், வேணுவனநாதர், வேய்முத்தநாதர்,
              நெல்வேலிநாதர், சாலிவாடீசர், வேணுவனேஸ்வரர்,
               வேணுவன மகாலிங்கேஸ்வரர், மூலவர் சுயம்பு மூர்த்தி.
     இறைவி - காந்திமதி அம்மை, வடிவுடையம்மை.
     தலமரம் - மூங்கில் (வேணு, வேய்)
     தீர்த்தம் - பொற்றாமரைக்குளம், (ஸ்வர்ண புஷ்கரணி) கருமாறித்
              தீர்த்தம், சிந்துபூந்துறை.

     சம்பந்தர் பாடல் பெற்ற தலம்.

     இக்கோயிலில் மிகப் பழமையான கல்வெட்டுக்கள் உள. இக்கோயில் 14
ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. காமிக ஆகம முறைப்படி அமைந்து நாடி
வருவோர்க்கு நலமருளும் இத்திருக்கோயில் திருநெல்வேலி நகரின் நடுவில்
அமைந்துள்ளது.

     கோயிலுள் பொற்றாமரைக் குளம் உள்ளது. நாற்புறமும் நல்ல படிகள்.
நடுவில் நீராழி மண்டபம் உள்ளது. இக்கோயிலில் ஊஞ்சல் மண்டபம்,
திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வசந்த மண்டபம், சங்கிலி
மண்டபம், சோமவார மண்டபம்,