‘தாமிர சபாபதி’ என்றழைக்கப்படுகிறார். சபைக்கு மேலே தாமிரத் தகடு வேயப்பட்டுள்ளது. பின்னால் உள்ள நடராஜர்-சிலாரூபம்-சந்தன சபாபதி என்றழைக்கப்படுகிறார். உள்ளே ருத்திர விஷ்ணு, பேதங்கள், ரிஷிகளின் உருவங்கள் உள்ளன. கீழே மரத்தாலும் மேலே தாமிரத்தாலும் ஆக்கப்பட்டு ஏழு அடுக்குகளைக் கொண்டு திகழும் இச்சபை சித்திர வேலைப்பாடுகளுடன் அருமையாகத் திகழ்கின்றது. சபைக்குப் பக்கத்தில் தலமரம் உள்ளது. இக்கோயில் இரு துர்க்கைச் சந்நிதிகள் உள்ளன. மகிஷாசுரமர்த்தினி சந்நிதி தெற்கு நோக்கியும், பண்டாசுரமர்த்தினி சந்நிதி வடக்கு பார்த்தும் உள்ளன. ஆறுமுகர் சந்நிதி இங்கு மிகவும் விசேஷமானது. வள்ளி தெய்வ யானையுடன் ஆறு முகங்களும் சுற்றிலும் திகழ, ஒவ்வொரு முகத்திற்கும் நேரே இரண்டிரண்டு திருக்கரங்கள் வீதம் சுற்றிலும் திகழ, அவ்வவற்றிற்குரிய ஆயுதங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்துள்ள பாங்கு அற்புதமானது. அமாவாசைப் பரதேசி என்பவர் ஒருவர் 120 வயது வரை வாழ்ந்திருந்து இச்சந்நிதியை விசேஷித்துக் காவடி எடுத்து இறுதியில் ஓர் அமாவாசையில் சித்தியடைந்தார். இவராலேயே இச்சந்நிதி மிக்க சிறப்பு பெற்றது. பாம்பன் சுவாமிகள் பதிகம் சுவரில் பதிக்கப்பெற்றுள்ளது. இக்கோயிலில் உள்ள ‘சுரதேவர்’ - ‘ஜ்வரதேவர்’ சந்நிதி மிகவும் சிறப்புடையது. மூன்று தலைகள், மூன்று கால்கள், மூன்று கைகளுடன் இம்மூர்த்தி, கையில் தண்டம், மணி, சூலத்துடன் காட்சி தருகின்றார். எவருக்கேனும் சுரம் இருப்பின், இம்மூர்த்திக்கு மிளகு அரைத்துச் சார்த்தி வெந்நீரால் அபிஷேகம் செய்தால் தீரும் என்னும் செய்தி மக்கள் வழக்கில் சொல்லப்படுகிறது. பொல்லாப் பிள்ளையார் சந்நிதி இங்கு மிகவும் விசேஷமானது. புத்திரப்பேறில்லாதவர்கள் நாற்பத்தொரு நாள்கள் விரதமிருந்து, கருப்பமுற்று, குழந்தையைப் பெற்றெடுத்தபின் இச்சந்நிதிக்கு எடுத்து வந்து இங்கு சன்னல் போல் உள்ள பகுதியில் உட்புறமாகத் தந்து வெளிப்புறமாக வாங்கும் பழக்கம் உள்ளது. இதனால் இவருக்குப் ‘பிள்ளைத்துண்ட விநாயகர்’ என்றும் பெயர். அறுபத்துமூவர் மூலத் திருமேனிகளைத் தொடர்ந்து மேலே கயிலாய பர்வதக் காட்சி உள்ளது. இங்குப் பெருமான் இராவணனை அழுத்திய - நொடித்த பாவனை நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. |