பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 789


     நடராசர் சந்நிதி மற்றொன்று தனியே உள்ளது. இப்பெருமான் அக்கினி
சபாபதி என்றழைக்கப்படுகிறார். சிவகாமி உடன் நிற்க, காரைக்காலம்மையார்
கையில் தாளமிட்டுப் பாட, சிரித்த முகத்துடன் ஆடும், அம்பலக்கூத்தன்
அழகைக் காணக்கண் ஆயிரம் வேண்டும்.

    காந்திமதி அம்பாள் சந்நிதி தனியே உள்ளது. கிழக்கு நோக்கியது.
நின்ற திருக்கோலம். வியாழன் தோறும் அம்பாளுக்குத் தங்கப் பாவாடை
சார்த்தப்படுகிறது. அம்பாள் சந்நிதி முன்புள்ள மண்டபத்தில் உள்ள இரு
தூண்கள் இசைத் தூண்களாக விளங்குகின்றன.

     இத் தலத்திற்குத் தல புராணம் உள்ளது. ‘காந்திமதியம்மை பிள்ளைத்
தமிழ்’ சிறப்புடைய நூலாகும்.

     ஆனியில் 41 நாள்களுக்குப் பெருவிழா, மண்டலாபிஷேகத்துடன்
சேர்ந்து நடத்தப்படுகின்றது.

     ஆடிப்பூர உற்சவம் அம்பாளுக்குப் பத்து நாள்களுக்குச் சிறப்பாக
நடைபெறுகின்றது. ஐப்பசியில் கல்யாண உற்சவம் 10 நாள்களுக்கு
நடைபெறுகின்றது.

     கார்த்திகை மாதத்தில் காலை 4 மணிக்கெல்லாம் கோயில்
தரிசனத்திற்காகத் திறந்திருக்கும். நான்கு சோம வாரங்களும் சிறப்பானவை.

     மார்கழித் திருவாதிரை உற்சவம், தைப்பூச உற்சவம், பங்குனி
உத்திரத்தில் செங்கோல் உற்சவம் முதலியவை ஒவ்வொன்றும் பத்து
நாள்களுக்குச் சிறப்பாக நடைபெறுகின்றன. மாசி மகத்தில் அப்பர் தெப்பம்
சிறப்பு. வைகாசி விசாகத்தில் சங்காபிஷேகம் விசேஷமானது.

     இத்திருக்கோயிலின் சார்பில், தேவாரப் பாடசாலை நடைபெறுகின்றது.
சமய நூலகம் உள்ளது. (காந்திமதி) அம்பாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி
(2) நெல்லையப்பர் ஆதாரப் பள்ளி (3) ஞானசம்பந்தர் பாலர் பள்ளி
முதலியவை நடைபெறுகின்றன.

   
“மருந்தவை மந்திர மறுமை நன்னெறியவை மற்றுமெல்லாம்
   அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
   பொருந்து தண் புறவினிற் கொன்றை பொன் சொரிதரத்துன்றுபைம்பூ
   செருந்தி செம்பொன்மலர் திருநெல்வேலியுறை செல்வர்தாமே”

   “வெடிதரு தலையினர் வேனல் வெள்ளேற்றினர் விரிசடையர்
   பொடியணி மார்பினர் புலியதளாடையார் பொங்கரவர்
   வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரைமையல் செய்வார்
   செடிபடு பொழிலணி திருநெல்வேலியுறை செல்வர்தாமே.”
                                              (சம்பந்தர்)