கொங்கு நாட்டுத் தலம். அவிநாசியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. பேருந்து வசதியுண்டு. முருகப்பெருமான் வழிபட்ட தலம். அகத்தியர் மார்க்கண்டேயர் துர்வாசர் ஆகியோர் வழிபட்ட தலம். இதற்கு மாதவிவனம் என்றும் பெயர். துர்வாசர் கற்பகவுலகிலிருந்து மாதவிமர (குருக்கத்தியை)த்தை இங்குக் கொண்டு வந்தார் என்பர். சுந்தரர் இவ்வழியே செல்லும்போது, இறைவன் தன் பூதகணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்துக் கொண்ட தலம். இறைவன் - முருகநாதேஸ்வரர், முருகநாதசுவாமி. இறைவி - ஆலிங்கபூஷணஸ்தனாம்பிகை, (முயங்குபூண் முலையம்மை) ஆவுடைநாயகி, மங்களாம்பிகை. சுந்தரர் பாடல் பெற்றது. சுவாமியும் அம்பாளும் மேற்கு பார்த்த சந்நிதிகள். மூலவர் அம்பாள் பீடத்தின் கோமுகம் வடக்கு நோக்கியுள்ளது. வழிமறித்து நிதிபறித்த இறைவன் இருக்குமிடத்தைக் கூப்பிட்டுச் சுந்தரருக்குக் காட்டிய (வேடுபறி நடந்த இடம்) ‘கூப்பிடுவிநாயகர்’ அவிநாசிக்குப் போகும் வழியில் 1 கி.மீ. தொலைவில் பாறைமேல் உள்ளார். கோயில் நுழைவு வாயிலில் பதினாறுகால் மண்டபத்தில் விநாயகர் சந்நிதி உள்ளது. இதைத் தாண்டி உள்ளே சென்றால் வலப்பால் வேடுவர் உருவமும் சுந்தரர் உருவங்கள் இரண்டு (ஒன்று பறிகொடுத்து முகம் வாடிய நிலையிலும் மற்றொன்று மீண்டும் பெற்ற மகிழ்ச்சி நிலையிலும்) உள்ளன. கோயில் பிராகாரத்தில் பைரவர் சந்நிதியும் நவக்கிரகங்களும் உள்ளன. இங்குள்ள சண்முகநாதர் சந்நிதி சிறப்பானது. பிரமதீர்த்தம், ஞானதீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் என்ற மூன்று தீர்த்தங்கள் உள்ளன. தலமரம் = வில்வம். இத்தலம் பிரமகத்திதோஷம் நீங்கிய தலம். சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் இவை நீங்க வேண்டுவோர் இங்குவந்து நீராடி வழிபடுவதையும், பல நாள்கள் இங்கேயே தங்கியிருப்பதையும் இன்றும் காணலாம். இங்குள்ள பிரமதாண்டவ நடராசர் சந்நிதி விசேஷமானது. இக்கோயிலுக்குப் பக்கத்தில் சற்றுத் தொலைவில் மாலாதரன் எனும் வேட மன்னன் வழிபட்ட மாதவனேஸ்வரர் கோயில் உள்ளது. நல்ல கல் கட்டிடம். வலப்புறம் பைரவர் சந்நிதி. இது விசேஷமானது. சுவாமி கிழக்கு நோக்கியுள்ளார். (சுயம்புமூர்த்தி என்று சொல்லப்படுகிறது) கோயிலின் முன் மண்டபம் உள்ளது. எங்கும் இல்லாத புதுமையாக இங்கு, இம்மண்டபத்தில் மேலே பெரிய நந்தி, ஆலயத்தைப் பார்த்தவாறு சுதையால் அமைக்கப்பட்டு உள்ளது. ஆலயச் சுவற்றில் நிருதி விநாயகர், |