பக்கம் எண் :

80 திருமுறைத்தலங்கள்


செல்லும் மரபை நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வருகின்றார்கள். சதா
காலமும் சேவைக்கு வந்து செல்லும் இவர்கள், இம்மரபைப் பிற்காலத்தோரும்
அறியும் வகையில் “கூழாண்டார் கோத்திரம் சதாசேர்வை” என்று கல்லில்
பொறித்து, அக்கல்லை, கோயிலின் முன் வாயிலில் உயர்ந்த படியைத்
தாண்டியவுடன் முதற்படியாக வைத்துள்ளனர்.

     இம்மரபினரின்   கோத்திரமே  ‘கூழாண்டார்கோத்திரம்’.  அதாவது
தாங்கள் கூழ்   உணவை   உண்டு,   விளைந்த  நெல்லை இறைவனுக்குச்
சமர்ப்பித்தவர்கள் என்பது பொருளாம். சிவப்பற்றினை உணர்த்தும் இச்செய்தி
நெஞ்சை நெகிழவைக்கின்றது.

     கல்வெட்டில்  நடராசப் பெருமானின்  பெயர் ‘அரங்கில் அண்டமுற
நிமிர்ந்தருளிய நாயனார்’ என்று குறிக்கப்பட்டுள்ளது.

     “கேடும்பிறவியும் ஆக்கினாரும் கேடிலா
     வீடுமாநெறி விளம்பினார்எம் விகிர்தனார்
     காடுஞ்சுடலையும் கைக்கொண்டு அல்லில்கணப்பேயோ(டு)
     ஆடும் பழையனூர் ஆலங்காட்டுஎம் அடிகளே.”           (சம்பந்தர்)

     “ஒன்றா உலகனைத்தும் ஆனார்தாமே
          ஊழிதோறூழி உயர்ந்தோர் தாமே
     நின்றாகி எங்கு(ம்) நிமிர்ந்தார் தாமே
         நீர் வளிதீ ஆகாசம் ஆனார்தாமே
     கொன்றாடுங் கூற்றை உதைத்தார் தாமே
         கோலப் பழனையுடையார் தாமே
     சென்றாடு தீர்த்தங்கள் ஆனார்தாமே
         திருஆலங்காடுறையும் செல்வர் தாமே.”   (அப்பர்)

  “முத்தாமுத்திதரவல்ல முகிழ்மென்முலையாள் உமைபங்கா
  சித்தாசித்தித் திறங்காட்டுஞ் சிவனே தேவர்சிங்கமே
  பத்தாபத்தர் பலர்போற்றும்பரமா பழையனூர்மேய
  அத்தா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.”
                                            (சுந்தரர்)

                              -“சொற்போரில்
  ஓலங்காட்டும் பழையனூர் நீலிவாதடக்கும்
  ஆலங்காட்டிற் சூழ்அருள்மயமே.”                (அருட்பா)