பக்கம் எண் :

800 திருமுறைத்தலங்கள்


     உளிபடாதது விடங்கம் - அடியில் சதுரபீடம். சுவாமியின் நெற்றியில்
பள்ளம் - சந்தனத்தை அப்பியுள்ளார்கள் திலகமாக; தலையில் ஜடா மகுடம்
இடக்கையில் சேவற் கொடி, சந்நிதி முன்பு ஒருபுறம் விநாயகர் மறுபுறம்
அருணகிரிநாதர், நக்கீரர் சிலையும் உள்ளது. தெய்வத் திருமலைச்
செங்கோட்டு வேலவன் சந்நிதி தரிசனமே தெய்வீகந்தான். எதிரில் உள்ள
வேளாளக்கவுண்டர் மண்டபத் தூண் ஒன்றில் வீரபத்திரர் உருவம் தத்ரூபமாக
உள்ளது. சிற்பக் கலையழகு வாய்ந்தது. மற்றொன்றில் அர்ச்சுனன்
தவக்கோலம், வேடன், குருவிக் காரியின் வடிவங்கள் முதலியன மிக அழகாக
வடிவாக்கப் பட்டுள்ளன.

     செங்கோடனின் உற்சவத் திருமேனி கிருத்திகை நாள்களில் தங்கக்
கவசம் சார்த்தி, தங்கமயிலேறித் தங்கக்காவடியுடன் புறப்பாடு
நடைபெறுகின்றது. திருமுறைத்தலமான இஃது அர்த்தநாரீஸ்வரத் தலமாகும்.
அர்த்தநாரீஸ்வரர் மூலவர் - நின்ற திருமேனி - (இலிங்க வடிவமில்லை)
மேற்கு நோக்கிய சந்நிதி, மூலவர் உருவ அமைப்பு அற்புதமாக உள்ளது. ஒரு
பாதி புடவை - ஒரு பாதி வேஷ்டி அலங்காரம். பெண்பாகத்தில் ஜடை.
முழுவடிவமும் வெள்ளைப் பாஷாணத்தால் ஆனது. இந்தக் கோலத்திலேயே
அலங்காரத்துடனேயே (மூலவர்) காட்சி தருகின்றார். திருவடியின்கீழ் குளிர்ந்த
நீர் சுரக்கின்றது. இது தேவ தீர்த்தம் எனப்படுகிறது. இத்தீர்த்தப் பிரசாதம்
நாடொறும் வரும் அன்பர்க்கு வழங்கப்படுகிறது. அமாவாசை நாள்களில்
இத்தீர்த்தம் 3, 4 அண்டாக்களில் சேகரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது. மூலவர் முன்னால் மரகதலிங்கமும், பிருங்கி மகரிஷியின்
உருவமும் உள்ளது.

     அர்த்தநாரீஸ்வரர் உற்சவத் திருமேனி மிக அற்புதமாகவுள்ளது.
ஆண்பக்கத்தில் (வலம்) கையில் தண்டாயுதம், பெண்பக்கத்தில் (இடம்) கை
இடுப்பில் வைத்த அமைப்பு ; மார்பில் பெண் பக்கத்தில் கொங்கை,
திருவடிகளில் ஒன்றில், சிலம்பு மற்றொன்றில் கழல், கண்களில்கூட ஆண்,
பெண் பாக வேறுபாடு ஒரு மயிரிழையில் அகலமாகவும் குறுகலாகவும்
காட்டப்பட்டுள்ளன.

     கேதாரகௌரி, மரகதலிங்கத்தைப் பூசித்து, இறைவனின் பாகத்தைப்
பெற்றதாக வரலாறு சொல்லப்படுகிறது. கேதாரகௌரி உற்சவத்திருமேனி
உள்ளது. சிலாரூபதக்ஷிணாமூர்த்தி அழகுடையதாகத் திகழ்கிறது. ஆதிகேசவப்
பெருமாள் சந்நிதி உள்ளது. கிழக்கு நோக்கிய சந்நிதி, ஸ்ரீ தேவி,
பூதேவியுடன் உற்சவத் திருமேனியும் உள்ளது. இச்சந்நிதி, நம்மாழ்வாரால்
மங்களா சாசனம் செய்யப்பட்டதாகும்.