கோயில் நல்ல நிலையில் அமைந்துள்ளது. மேலிருந்து நோக்கின் ஊர் முழுவதையும் நன்கு காணலாம். இத்தலத்திற்கு வீரகவிராஜபண்டிதரால் பாடப்பட்ட தலபுராணம் உள்ளது. ஊரின் நடுவில் சுகந்த குந்தளாம்பிகை சமேத கயிலாசநாதர் கோயில் உள்ளது. திருஞான சம்பந்தர் கொங்கு நாட்டுத் தல யாத்திரையில் முதலில் இப் பதியை வணங்கி, பின்பு சில ஊர்களுக்குச் சென்றுவிட்டுத் திரும்பவும் இங்கு வந்தபோது, அவருடன் வந்த அடியார்களை ‘நளிர்சுரம்’ பற்றி வருத்த ‘அவ்வினைக் கிவ்வினை’ என்னும் பதிகம்பாடி, ‘தீவினைவந்தெம்மைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்’ என ஆணையிட்டு அந்நாடு முழுவதும் பிணிதீர்த்தார் என்பது பெரியபுராண வரலாறு. இத்தலத்தில் முதலாம் இராசராசன், சுந்தரபாண்டியத் தேவர், மைசூர் கிருஷ்ணராஜ உடையார் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. இத்தலத்துச் சொல்லப்படும் ஒரு செய்தி :- இங்கு வாழ்ந்த குணசீலர் என்ற புலவருக்காகச் செங்கோட்டுவேலர் மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து குணசீலரின் கடைமாணாக்கர் என்று தன்னைக் கூறிக்கொண்டார். பாண்டிப்புலவரேறு என்பவர் ; “சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்பசயிலமெனில் அமரிற்படம் விரித்து ஆடாடததென்னே” - என்று பாடி அதற்குமேல் எழுதமுடியாது திண்டாடினார் அப்போது, சிறுவனாக வந்த வேலவன் “அஃது குமரன் திருமால் முருகன் மயில்வாகனம் கொத்துமென்றே” - எனப் பாட்டினை முடித்து அப்புலவரைத் திரும்பிப் போகும்படிச் செய்தார் என்ற செய்தி, இம்மலையடிவாரத்தில் நிகழ்ந்ததாகுமென்று பேசப்படுகிறது. வைகாசியில் பெருவிழா நடைபெறுகிறது. வீரகவிராஜ பண்டிதர் எழுதிய தலபுராணம் உள்ளது. வண்ணச்சரபம் அவர்களும் பத்துப் பதிகங்கள் பாடியுள்ளார். “வெந்த வெண்ணீ றணிந்து விரிநூல் திகழ்மார்பினல்ல பந்தணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்தருளிக் கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பவரே. (சம்பந்தர்) “அவ்வினைக் கிக்வினையாமென்று சொல்லுமஃதறிவீர் உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே கைவினை செய்தெம்பிரான் கழல் போற்றுது நாமடியோம் செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்.” (சம்பந்தர்) |