கூடுமிடத்தில் உள்ளதாலும் (கூடல்) வெஞ்சமாக்கூடல் என்று பெயர் பெற்றது. கோயிலுக்குப் பக்கத்தில் ஓடும் ஆறு, குடகனாறு, குழகனாறு, குடவன் ஆறு எனப்பலவாறு அழைக்கப்படுகிறது. இத்தலத்துள்ள இறைவன் ஒரு சமயம், உமையே ஒரு முதிர்ந்த கிழவியாக வடிவுகொண்டு வீற்றிருக்க, சுந்தரர் பாட்டிற்கு மகிழ்ந்து தன் பிள்ளைகளை அக்கிழவியிடம் ஈடு காட்டிப் பொன் வாங்கிச் சுந்தரருக்கு அளித்தார் என்ற செய்தியைக் கொங்கு மண்டலச்சதகச் செய்யுள் தெரிவிக்கிறது. இச்செய்தி பெரிய புராணத்துள் இல்லை. அச் சதகப் பாடல் வருமாறு :- “கிழவேதி வடிவாகி விருத்தையைக் கிட்டி என்றன் அழகாகும் மக்கள் அடகு கொண்டு அம்பொன் அருளுதி என்று எழுகாதலால் தமிழ்பாடிய சுந்தரர்க்கு ஈந்தஒரு மழுவேந்திய விகிர்தேசுவரன் வாழ் கொங்கு மண்டலமே.” இறைவன் - கல்யாண விகிர்தேஸ்வரர், விகிர்தநாதேஸ்வர் இறைவி - மதுரபாஷிணி, பண்ணேர்மொழியம்மை, விகிர்தநாயகி. தீர்த்தம் - குடகனாறு. சுந்தரர் பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதரின் திருப்புகழும் உள்ள தலம். இராசகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறது. விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. உள்ளே நுழைந்ததும் வலப்பால் சூரியனும் இடப்பால் சந்திரனும் உளர். வெளிச்சுற்றில் பஞ்சலிங்கங்கள் உள்ளன. வள்ளி தெய்வயானை உடனாக ஆறுமுகப் பெருமான் மயிலின் மீது காலை வைத்தூன்றிய நிலையில் காட்சிதருவது தரிசிக்கத் தக்கது. நவக்கிரகம், பைரவர், நம்பியாண்டார் நம்பிகள், சேக்கிழார், அறுபத்துமூவர் சந்நிதிகள் உள்ளன. நாயன்மார்களின் மூர்த்தங்களின் கீழ், நாடு, மரபு, காலம், திருநட்சத்திரம் முதலிய விவரங்களும் எழுதப் பட்டுள்ளன. உற்சவ மூர்த்தங்களுள் ; சோமாஸ்கந்தர், பல்லக்குச் சொக்கர், சுப்பிரமணியர் முதலியவை தரிசிக்கத்தக்கன. நடராசதரிசனம் நம்மை மகிழ்விக்க, மேலே சென்றால் மூலவர் சந்நிதி வாயிற் கதவுகளில் கொங்கு நாட்டுத் தலங்கள் ஏழிலும் உள்ள மூர்த்தங்கள் செதுக்கப்பட்டுள்ளது மிகச் சிறப்பாகவுள்ளது. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். |