| அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியுள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலம். நாடொறும் இரண்டு கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. இத்திருக்கோயிலைப் புதியதாக நிர்மாணித்த பெரும்பணிக்குத் துணையான பெருமக்கள் தவத்திரு.சுந்தரசுவாமிகள், திருமுருக கிருபானந்த வாரியார், பொள்ளாச்சி தொழிலதிபர் திரு. N .மகாலிங்கம், ஈரோடு திரு M. அழகப்பன், திரு. A.V. இராமச்சந்திர செட்டியார், மற்றும் உள்ளோராவார். மகாகும்பாபிஷேக விழாவில் காஞ்சிபுரம் தொண்டை மண்டலாதீன குருமகாசந்நிதானம் 230வது பட்டம், ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள், கௌமார மடாலயம் தவத்திரு சுந்தர சுவாமிகள் பேரூர் தவத்திரு. சாந்தலிங்க அடிகளார், தவத்திரு. குன்றக்குடி அடிகளார், திருமுருக கிருபானந்த வாரியார், நெரூர் சுவாமிகள் முதலிய பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அருகில் உள்ள திருமுறைத் தலம் ‘கருவூர் ஆநிலை’ - கரூர் ஆகும். கல்வெட்டில் இறைவன் பெயர் ‘வெஞ்சமாக்கூடல் விகிர்தர்’ என்றும் இறைவி பெயர் ‘பனிமொழியார்’ என்றும் குறிக்கப்பட்டுள்ளது. “பண்ணேர் மொழியாளை யொர் பங்குடையாய் படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய் தண்ணார் அகிலுந்நல சாமரையும் மலைத் தெற்று சிற்றாறதன் கீழ் கரைமேல் மண்ணார் முழவுங் குழலுமியம்ப மடவார் நடமாடு மணியரங்கில் விண்ணார் மதிதோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே." (சுந்தரர்) திருப்புகழ் வண்டுபோற் சாரத் தருள்தேடி மந்திபோற் காலப் பிணிசாடிச் செண்டுபோற் பாசத் துடனாடிச் சிந்தைமாய்த்தேசித் தருள்வாயே தொண்டராற் காணப் பெறுவோனே துங்கவேற் கானத் துறைவோனே மிண்டராற் காணக் கிடையானே வெஞ்சமாக் கூடற் பெருமாளே. |