பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 807


     இறைவன் - மகுடேஸ்வரர், கொடுமுடிநாதர். (கல்வெட்டில்
‘மலைக்கொழுந்தீசர்’ என்ற பெயருள்ளது.)
     இறைவி - மதுரபாஷிணி, திரிபுரசுந்தரி, பண்மொழி நாயகி,
வடிவுடைநாயகி.
     தீர்த்தம் - தேவதீர்த்தம், பிரமதீர்த்தம், காவிரி. தலமரம் - வன்னி.

     மூவர் பாடல் பெற்ற தலம். பக்கத்தில் காவிரி உள்ளது. கொங்கு
நாட்டில் மூவர் பாடலும் பெற்ற தலம் இஃதொன்றேயாம்.

     ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் நடந்த போட்டியில் ஆதிசேஷன் சுற்றிய
மேருவின் ஆயிரம் சிகரங்களுள் ஒன்று, ஐந்து மணிகளாக உடைப்பட்டுச்
சிதறியது.

     அவற்றுள் சிவப்புமணி திருவண்ணாமலையாகவும், மரகதம் ஈங்கோய்
மலையாகவும், மாணிக்கம் திருவாட்போக்கியாகவும், நீலம் பொதிகையாகவும்,
வைரம் கொடுமுடியாகவும் ஆயின என்பது தலபுராணம்.

     மேருமலையின் ஒரு கொடுமுடி (சிகரம்) இங்கு வீழ்ந்தமையால்
இப்பெயர் வந்தது என்பது வரலாறு. அதுவே சிவலிங்கமாக உள்ளது.
சிவலிங்கம் மிகவும் குட்டையானது. சிகர வடிவில் உள்ளது. அகத்தியர்
தழுவிய விரல் தழும்பு மேலே உள்ளது. சதுரபீடம். ‘பாண்டிய மன்னனின்
விரல் வளர்ந்து குறை தீர்ந்த தலமாதலின் ‘பாண்டிக் கொடுமுடி’ என்றாயிற்று
(அங்கவர்த்தனபுரம்) பரத்வாசர், அகத்தியர் வழிபட்ட தலம்.

     சுந்தரமூர்த்தி சுவாமிகள் நமசிவாயத் திருப்பதிகம் பாடியருளிய தலம்.
இத்தலத்தை வழிபட்டால் சிவன், விஷ்ணு, பிரமன் ஆகிய மூவருடைய
தரிசனம் கிடைக்கிறது- மும்மூர்த்தித்தலம்.

     இத்திருக்கோயிலில் அழகான உற்சவ மூர்த்திகள் உள்ளன.
இவைகளைப் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

     சித்திரை பௌர்ணமியில் பரத்துவாசருக்கு நடனக்காட்சி தந்த
குஞ்சிபாத நடராசர் முயலகன் இல்லாமல் நின்று சதுர்முகத்தாண்டவ
நடனமிடுவதாக அமைந்துள்ள மூர்த்தம். இதுபோல் காண்பது அரிது.
(2) பிக்ஷாடனர் (3) சந்திரசேகரர் (4) உமாமகேஸ்வரர் (5) திரிபுரசம்ஹார
மூர்த்தி - நின்றநிலை. உள்பிரகாரத்தில் நால்வர் சந்நிதிகளும் தொடர்ந்து
அறுபத்துமூவர் திருமேனிகளும் உள்ளன.

     இங்குள்ள தட்சிணாமூர்த்தியின்கீழ் முயலகன் வடிவமும் சனகாதி
நால்வர்களுக்குப் பதிலாக ஒருவருடைய வடிவமுமே உள்ளது.