பக்கம் எண் :

808 திருமுறைத்தலங்கள்


     தட்சிணாமூர்த்திக்குச் சடாமுடி உள்ளது. ரிஷபம் உள்ளது. காவிரி
கண்ட விநாயகர் சந்நிதி உள்ளது. ஆடிப்பெருக்கு இத்தலத்திலும் விசேஷம்.
உள்சுற்றில் கஜலட்சுமி, உமாமகேஸ்வரர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன.
சுப்பிரமணியரைத் தாங்கும் மயில் வழக்கத்திற்கு மாறாக எதிர்த் திசையைப்
பார்த்த வண்ணம் உள்ளது. பெருமானின் பன்னிரு கைகளிலும் ஆயுதங்கள்
உள்ளன. நடராஜர், சிவகாமசுந்தரி சந்நிதி மிக அழகு.

     அம்பாள் சந்நிதி தனியே உள்ளது. பிராகாரத்தில் சப்தமாதர்
உருவங்கள் கல்லில் உள்ளன. சரஸ்வதி சந்நிதி உள்ளது.

     கோயிலுள் வெளிச்சுற்றில் மிகப் பெரிய வன்னி மரம் உள்ளது. மிக
வயதான மரம், கீழே பிரம்மா (கற்சிலை) 3 முகங்களோடு காட்சி தருகிறார்.
வன்னி மரத்தையே ஒரு முகமாகப் (தவஞ்செய்து) பெற்றார் என்பது வரலாறு.
மூன்று தீர்த்தங்கள் உள்ளன. துலா ஸ்நானம் இங்குச் செய்வது
கங்காஸ்நானத்திற்குச் சமம் என்னும் குறிப்பு சேது புராணத்தில் உள்ளது.
பிரம்மாவுக்குப் பக்கத்தில் ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. பெருமாள்
(வீரநாராயணப் பெருமாள்) மகாலட்சுமித்தாயாருடன் காட்சித்தருகிறார்.
சனீஸ்வரர், காலபைரவர் சந்நிதிகளும் உள்ளன.

     சுந்தரபாண்டியன் கேசரி காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலில்
உள்ளன. இங்குள்ள காவிரியின் நடுவிலுள்ள ‘அகத்தியர் பாறையில்’ தான்,
அகத்தியரின் கமண்டல நீரைக் காகம் உருக்கொண்டு விநாயகர் கவிழ்த்த
நிகழ்ச்சி நடந்ததென்பர். சித்திரையில் பெருவிழா நடைபெறுகிறது.

    
 “பெண்ணமர் மேனியினாரும் பிறைபுக்கு செஞ்சடையாரும்
     கண்ணமர் நெற்றியினாருங் காதமருங் குழையாரும்
     எண்ணமருங் குணத்தாரும் இமையவரேத்தநின்றாரும்
     பண்ணமர் பாடலினாரும் பாண்டிக்கொடு முடியாரே”
                                           (சம்பந்தர்)

     “சிட்டனைச் சிவனைச் செழுஞ்சோதியை
     அட்ட மூர்த்தியை ஆலநிழலமர்
     பட்டனைத் திருப்பாண்டிக் கொடுமுடி
     நட்டனைத் தொழநம் வினை நாசமே”         (அப்பர்)

     “மற்றுப் பற்றெனக்கின்றி நின் திருப்பாதமே மனம்பாவித்தேன்
     பெற்றலும் பிறந்தேனினிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன்
     கற்றவர் தொழுதேத்துஞ் சீர்க்கறையூரிற்பாண்டிக் கொடுமுடி
     நற்றவா உனை நான்மறக்கினுஞ் சொல்லுநா நமச்சிவாயவே”
                                              (சுந்தரர்)