பக்கம் எண் :

812 திருமுறைத்தலங்கள்


     நடராஜர் சந்நிதியும், கோஷ்டமூர்த்தமாக தட்சிணாமூர்த்தி
முதலியவையும் உள. பிராகாரத்தில் ஒரு சுவாமி சந்நிதியும், இலக்குமி
சந்நிதியும் அடுத்து ஆறுமுகர் சந்நிதியும் உள்ளது. (இறையனார்
களவியலுரையில் ‘கருவூர் உள்ளிவிழா’ என்று வருகின்ற குறிப்புக்கும்
உண்மைப் பொருள் விளங்கவில்லை என்ற ஏக்கமும் ஓர் அன்பரின்
உள்ளத்திலிருந்து வெளிப்பட்டது.)

     மூலவர் - சிவலிங்கத்தின் மீது மாட்டுக்குளம்பு பட்டது போல
இருபக்கங்களிலும் பள்ளங்கள் உள்ளன. மேற்புறம் சொரசொரப்பாகவும்
உள்ளது.

     இரு அம்பாள் சந்நிதிகள் இருக்கின்றன. இது பற்றித் தெரியவரும்
செய்திகள் :- இவ்விரு அம்பாள் சந்நிதிகளுள் கிழக்கு நோக்கியுள்ள
அலங்கார நாயகி சந்நிதியே ஆதியானது. மற்றதாகிய சௌந்தர நாயகி சந்நிதி
பற்றிய ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. (1) அதாவது கரூருக்குப் பக்கத்தில்
ஆண்டவர் கோயிலூர் என்னும் ஊர் உள்ளது. அங்கு வாழ்ந்து வந்த ஒரு
பெண், ஆண்டாள்போல - இவ்விறைவனை மணந்து கொண்டனளாம் ;
அதனால்தான் சுவாமி, திருவிழாவில் ஒரு நாள் அவ்வூருக்கு இன்றும் சென்று
வருகின்றதாம். மற்றொரு செய்தி (2) மாலிக்காபூரின் படையெடுப்பின்போது
அம்மன் திருமேனி புதைத்து வைக்கப்பட்டது. அது பிறகு தோண்டியபோது
கிடைக்கவில்லை. ஆதலால் புதிய அம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பின்பு, புதைத்து வைக்கப்பட்ட முன்னதும் கிடைத்து விட்டது. அதனால்
அதையும் இரண்டாவதாகப் பிரதிஷ்டை செய்து விட்டனர். நவக்கிரகத்திற்கு
எதிரில் பைரவர் சந்நிதி, சற்று உயரத்தில் உள்ளது. கோயில் சந்நிதி வீதிக்கு
கிழக்கில் நான்கு வீதிகள் கூடுமிடத்தில் (தெருவில்) தான் பெரியபுராணத்தில்
வரும் நிகழ்ச்சியான எறிபத்த நாயனார் பட்டத்துயானையை வெட்டிய வரலாறு
நடந்ததாம். இவ்விழா இன்றும் நவராத்திரியில் ஒரு நாளில் இவ்விடத்தில்
கோவை, சிவக்கவிமணி திரு. C.K. சுப்பிரமணிய முதலியார் அவர்களின்
அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பெறுகின்றது.

     மாசி மாதத்தில் ஐந்து நாள்கள் சூரிய ஒளி சுவாமிமீது படுவதாகச்
சொல்லப்படுகிறது.

    
 ‘நீதியார் நினைந்தாய நான்மறை
     ஓதியாரொடுங் கூடலார் குழைக்
     காதினார் கருவூருளானிலை
     ஆதியாரடியார் தமன்பரே.