“கால்களாற் பயனென், கறைக்கண்டன் உறைகோயில் கோலக்கோபுரக் கோகரணம் சூழாக், கால்களாற் பயனனென்.’ ஒரு சமயம் இராவணன் இலங்கையில் பிரதிஷ்டை செய்விப்பதற்காகக் கயிலையிலிருந்து (சிவபெருமானிடம்) ஒரு சிவலிங்கம் பெற்று வந்தான். வந்தவன் வழியில் இத்தலத்தில் சற்று இளைப்பாற எண்ணித் தரையில் வைத்தான். இறைவன் இத்தலத்திலேயே வீற்றிருக்கத் திருவுள்ளம் கொண்டாராதலின், அவன் சிறிது நேரம் இளைப்பாறிய பின்னர் அச்சிவலிங்கத்தை மீண்டும் எடுக்க முயன்றபோது அது அசைந்து கொடுக்கவில்லை. அவன் தன் வலிமையனைத்தையும் பயன்படுத்தி எடுக்க முயன்றபோது அச்சிவலிங்கபாணம் பசுவின் காது போலக் குழைந்துவிட்டது. அதனால் தலத்திற்குக் கோகர்ணம் என்று பெயர் வந்தது. இறைவனுக்கு மகாபலேஸ்வரர் என்று பெயருண்டாயிற்று. ஆலயத்தில் நேரிற்காண்போர், சிவலிங்கம் ஒரு கொட்டைப்பாக்கு அளவில் ஆவுடையாரில் அடங்கியிருப்பதைக் காணலாம். இத்தலத்து வழக்கப்படி மக்கள் திருமேனியைத் தொட்டு நீராடி மலர்சூட்டி வழிபடலாம். இறைவன் - மஹாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்ம லிங்கேஸ்வரர். இறைவி - கோகர்ணேஸ்வரி, தாம்ரகௌரி. சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. இத்தலத்தில் சிவராத்திரி வழிபாடு சிறப்புடையது. இத்தலச் சிறப்பை பிரமோத்திர காண்டம், உபதேசகாண்டம் முதலிய நூல்கள் புகழ்கின்றன. பிரமன், அகத்தியர், காமதேனு, மார்க்கண்டேயர், சரஸ்வதி, வசிட்டர் முதலான மகரிஷிகள், இராவணன், நாகராசன் முதலிய எண்ணற்றோர் இப்பெருமானை வழிபட்டுள்ளனர். கோயிலமைப்பு, தமிழ்நாட்டு அமைப்பினின்றும் வேறானது. தெற்கிலும் மேற்கிலும் வாயில்கள் உள்ளன. மேற்குவாயில் வழியாகக் கடற்கரைக்குச் செல்லலாம். கோயில் கடற்கரைக்கு அருகில் உள்ளது. தெற்கு வாயில் வழியாக உட்சென்றால் கோபுர வாயில் கடந்ததும் விசாலமான வெளிப்பிராகாரம். உள்வாயில் தாண்டியதும் ரிஷபதேவர் தரிசனம். அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியது - பக்கத்தில் தாம்ரகுண்டமென்னும் தடாகம் உள்ளது. உட்புறம் மகாபலேஸ்வரர் கருவறை பக்கத்தில் தத்தாத்ரேயர், ஆதிகோகர்ணேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. தலம்-52 |