பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 819


     வருணனை ஏவினார். அந்தணச் சிறுவன் போல அவன் முன் தோன்றி
நின்றார்.

     இராவணன் வந்த அந்தச் சிறுவனை நோக்கிச் சிவலிங்கத்தை
அச்சிறுவன் கையில் கொடுத்துச் சிறுநீர் கழித்து வருமளவும் அதனைக்
கையில் வைத்துக்கொண்டு நிற்குமாறு வேண்டினான். சிறுவனாக வந்த
விநாயகர் இராவணனை நோக்கி என்னால் சுமைபொறுக்க இயலாத நேரத்தில்
மூன்றுமுறை உன்னை அழைப்பேன் அதற்குள் வராவிட்டால் நிலத்தில்
வைத்து விடுவேன் என அருளினார். இராவணனும் இசைந்து சென்றான்.
நெடுநேரம் ஆகியும் அவன் வராததால் மூன்றுமுறை, அழைத்து
சிவலிங்கத்தைப் பூமியில் வைத்து விட்டார். இராவணன் வந்து சிவலிங்கத்தை
இருபது கரங்களாலும் எடுக்க முயன்றான். பெருமான் பசுவின் காதுபோலக்
குழைந்து காட்டினார். இராவணன், மகாபலம் உடையவர் இவ்விறைவர் எனக்
கூறி அந்தணச்சிறுவன் செய்த தவறுக்காக மூன்று முறை அவனது தலையில்
குட்டினான். சிறுவனாக வந்த விநாயகர் தம் உண்மை வடிவை அவனுக்குக்
காட்டிப் பந்து போல அவனைத் தூக்கி எறிந்து விளையாடினார். இராவணன்
பிழைபொறுக்க வேண்டினான். விநாயகர் உன் தலையில் இவ்வாறே
மூன்றுமுறை குட்டிக்கொள் என்று கூறினார். இராவணன் தான் செய்த
பிழைக்கு வருந்திக் குருதிசோரத் தலையில் குட்டிக்கொண்டு அவரை
வழிபட்டு அருள் பெற்றான். விநாயகர் சினம் தணிந்து தலையில்
குட்டிக்கொண்டு வழிபடுவோர்க்கு வேண்டும் வரங்கள் தருவதாகக் கூறி
இராவணனின் பிழைகளைப் பொறுத்து அவனுக்கு நல்வரங்கள் தந்தருளினார்.

     இத்தலத்திற்கு வருவோர் முதலில் கோடி தீர்த்தத்தில் நீராடி, பின்பு
கடல் நீராடி, பிண்டதர்ப்பணம் செய்து, மீண்டும் நீராடி பிறகு
மகாபலேஸ்வரரை வழிபடவேண்டும். அமாவாசை நாள் கடல் நீராட்டுக்கு
விசேஷமானது இத்தலம் ; பாஸ்கரத்தலங்களுள் ஒன்றாகும். ஏனையவை :-
காசி, புஷ்பகிரி, காஞ்சிபுரம், ஸ்ரீசைலம், சேது, கேதாரம் முதலியன.
சிவராத்திரி விழா சிறப்பானது.

     பேதைமட மங்கையொரு பங்கிட
          மிகுத்திடப மேறியமரர்
     வாதைபட வண்கடலெ ழுந்தவிட
          முண்டசிவன் வாழுமிடமாம்
     மாதரொடும் ஆடவர்கள் வந்தடி
          யிறைஞ்சிநிற மாமலர்கள்தூய்க்
     கோதைவரி வண்டிசைகொள் கீதமுரல்
          கின்றவளர் கோகரணமே.      (சம்பந்தர்)