3. காஞ்சிபுரத்திலிருந்து கடம்பத்தூர் வழியாகத் திருவள்ளூர் செல்லும் பேருந்துப் பாதையில், கடம்பத்தூரை அடுத்துத் திருப்பாசூர் உள்ளது. 4. திருவள்ளூர் - பேரம்பாக்கம் டவுன்பஸ் திருப்பாசூர் வழியாகச் செல்கிறது. பரசு - மூங்கில், மூங்கிற்காட்டிலிருந்து வேடுவர்களால் வெளிப்படுத்தப் பட்ட இறைவன் வீற்றிருந்தருளுகின்ற தலம். பசுவொன்று மூங்கிற் புற்றில் பால் சொரிய, அதைக் கண்ட வேடர்கள் வெட்டிப் பார்க்க, சிவலிங்கம் வெளிப்படலாயிற்று. வேடர்கள் வெட்டிப் பார்த்தமையால் சிவலிங்கம் மேற்புறத்திலும் பக்கவாட்டுகளிலும் வெட்டுப்பட்டுள்ளது. வேடர்களால் செய்தியறிந்த கரிகாலன், இக் கோயிலைக் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. மற்றொரு வரலாறு : இக் கோயிலைக் கட்ட எண்ணிய கரிகாலன் காளி உபாசனை பெற்ற, இப்பகுதியை ஆண்டு வந்த குறுநில மன்னன் ஒருவனுடன் ஒருமுறை போர் செய்ய நேரிட்டது. அவ்வாறு போரிடுங்கால் அம்மன்னனுக்குத் துணையாகக் காளி வந்து போரிட்டதால் கரிகாலனால் வெற்றி பெற முடியவில்லை. மனம் சோர்ந்த கரிகாலன் இப்பெருமானிடம் விண்ணப்பித்தான். பெருமான் நந்தியைத் துணையாக அனுப்ப, மீண்டும் கரிகாலன் சென்று போரிட்டான். போரின்போது காளி தோன்ற, நந்தியெம்பெருமான் அவளை உற்றுநோக்க அவளும் வலியடங்கி நின்றாள். நந்தி அக்காளிக்கு விலங்கு பூட்டி இங்கு அடைத்தார் ; வெற்றி பெற்ற மன்னன் உள்ளம் மகிழ்ந்து இத் திருக்கோயிலைக் கட்டினான் என்பர். இது தொடர்பாகத் தற்போது கோயிலில் வெளிப்பிராகாரத்தில் சிதைந்திருக்கும் நூற்றுக்கால் மண்டபத்தின் முன் ‘விலங்கு இட்ட காளி’யின் சிற்பம் உள்ளது. அம்பாள் வழிபட்ட தலம். சந்திரன் ; திருமால் ஆகியோரும் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். திருமால், இங்குள்ள சோமதீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு வினை நீங்கப்பெற்றதாக வரலாறு சொல்லப்படுகிறது. கோயிலுள் இதை உணர்த்தும் வகையில் ‘வினைதீர்த்த ஈஸ்வரர்’ திருமேனி உள்ளது. திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த திருக்கோயில் இஃது. இறைவன் - வாசீஸ்வரர், பசுபதீஸ்வரர், உடையவர், பாசூர்நாதர். இறைவி - பசுபதிநாயகி, மோகனாம்பாள், பணைமுலை நாச்சியார், தம்காதலி (தங்காதலி). |