பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 83


     தலமரம் - மூங்கில்.
     தீர்த்தம் - 1. சோமதீர்த்தம் (கோயிலின் பக்கத்தில் குட்டையாக
                உள்ளது.)
            - 2. மங்களதீர்த்தம் (ஊருக்கு வெளியில் பெரிய குளமாக
                உள்ளது. நீரின்றிப் பயன்படுத்தப்படாது உள்ளது.)

     சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.

     மூன்று நிலைகளுடன்  கூடிய  இராசகோபுரம் தெற்கு நோக்கியுள்ளது.
சுவாமி, அம்பாள் கோயில்கள் தனித்தனி   விமானங்களுடன்  தனித்தனிக்
கோயிலாகச் சுற்று மதில்களுடன் விளங்குகின்றன.  வெளிமதில்  இவற்றை
உள்ளடக்கியுள்ளது. சந்நிதிகள் கிழக்கு நோக்கியவை. வெளிப்பிராகாரத்தில்
சந்நிதி ஏதுமில்லை. சந்நிதிகளுக்கு கிழக்கு நோக்கிய வாயில்கள் இருப்பினும்,
தெற்கு வாயிலே பயன்படுத்தப்படுகின்றது.

     உள்ளே செல்லும்போது அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம்.
வாயிலில் துவாரபாலகியர்   உள்ளனர்.   சுற்றிவரப் பிராகார வசதி உள்ளது.
கோஷ்ட மூர்த்தங்கள் எவையுமில்லை.  அம்பாள் நான்கு திருக்கரங்களுடன்
(அபய, வரத, பாசாங்குசம்) அழகான  திருமேனியுடன்  காட்சியளிக்கின்றாள்.
இறைவனே அம்பாளின் அழகில்  மயங்கி, ‘தம்காதலி’  என்றழைத்ததாகவும்
அப்பெயரே அம்பாளுக்கு   இன்று ‘தங்காதலி’  என்று   வழங்குவதாகவும்
சொல்லப்படுகிறது. தலப்பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன.

     அடுத்துள்ள  வாயிலைத் தாண்டினால்  ‘செல்வமுருகன்’   தரிசனம்.
எதிரில் நவக்கிரக சந்நிதி. பக்கத்தில் உற்சவ முருகனின்  சந்நிதி.  அடுத்து
சோமாஸ்கந்தர் சந்நிதி. இதையடுத்து ‘விநாயகர் சபை’ உள்ளது. இச்சபையில்
பல்வேறு அமைப்பிலும் அளவிலும் சிறியதும்   பெரியதுமாகப்   பதினோறு
விநாயகர்கள் காட்சி தருகின்றனர். வலம்புரி விநாயகர் பிரதானமாக உள்ளார்.
ஒரு பக்கத்தில் ‘வினைதீர்த்த ஈஸ்வரர்’   உருவமும்   இவரை   வழிபட்ட
திருமாலின் உருவமும் (ஆதிசேஷனுடன் கூடி) உள்ளன. அடுத்த வாயிலைக்
கடந்தால் அழகான நடராச சபையை   எதிரில்   தரிசிக்கலாம்.   சபையில்
பெருமானுடன் சிவகாமியும் மாணிக்கவாசகரும் உள்ளனர்.

     சந்திரசேகர்,  சுக்கிரவார   அம்மன்,  விநாயகர்,  சண்முகர், வள்ளி
தெய்வயானை, நால்வர், பாசூர்   அம்மன் (கிராமதேவதை), சோமாஸ்கந்தர்
முதலிய உற்சவத் திருமேனிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.