சம்பந்தர் பாடல் பெற்றது. தென்கயிலாயமான திருக்காளத்தியைத் தொழுத பின்பு அங்கிருங்தே இத்தலத்தைத் தொழுது பாடிப் போற்றினார். பத்ரிநாத் கோயிலை இரவு அடைந்து, அடிவாரத்தில் இரவு தங்கி, விடியற்காலை 4 மணியளவில் எழுந்து பார்த்தால் இந்திரநீல பருப்பதத்தைத் தரிசிக்கலாம். அந்நேரத்தில் இம்மலை இந்திரநீல நிறத்தில் கண்கொள்ளாக் காட்சியாகத் தரிசனம் தருகிறது. நேரம் ஆக ஆக பின்பு நிறம் மாறிவிடுகிறது. திருவருள் உடையவர்க்கே இத்தரிசனம் கிடைக்கும். இங்குள்ளோர் இம்மலையை நீலகண்ட பர்வதம் என்று வழங்குகின்றனர். “பூவினானொடு மாலும் போற்றுறுந் தேவனிந்திர நீலபர்ப்பதம் பாவியா எழுவாரைத் தம்வினை கோவியா வருங் கொல்லுங் கூற்றமே.” (சம்பந்தர்) - “போகிமுதல் பாடியுற்ற நீலப் பருப்பதத்தில் நல்லோர்கள் தேடிவைத்த தெய்வத் திலகமே.” (அருட்பா) வட நாட்டுத் தலம். அம்பிகை தவஞ்செய்த இடம். ஹரித்வாரிலிருந்து கேதாரம் (கேதார்நாத்) செல்லும் வழியிலுள்ள ‘கௌரிகுண்டம்’ என்னும் இடமே இஃது என்று சொல்லப்படுகின்றது. இங்குள்ள வெந்நீர் ஊற்றில் அவசியம் நீராட வேண்டும். சூரியனும் சந்திரனும் வழிபட்ட தலம். கேதார் நாத் யாத்திரையில் கௌரிகுண்டம் வரையில்தான் பேருந்துகள் செல்லும். அங்கிருந்து நடந்தோ, குதிரைமீதோ, டோலியிலோ 14 கி.மீ. கரடுமுரடான மலைப் பாதையில் ஏறிச் சென்று கேதார நாதரைத் தரிசித்துத் திரும்ப வேண்டும். இறைவன் - அருள்மன்னேஸ்வரர் இறைவி - மனோன்மணி |