பக்கம் எண் :

828 திருமுறைத்தலங்கள்


     “தொண்டர் அஞ்சுகளிறும் அடக்கிச் சுரும்பார் மலர்
     இண்டைகட்டி வழிபாடு செய்யும் இடம் என்பரால்
     வண்டுபாட மயில் ஆல மான்கன்றுதுள்ள வரிக்
     கெண்டைபாயச் சுனைநீலம் மொட்டு அலருங்கேதாரமே.”
                                           (சம்பந்தர்)

     “வாள்ஓடிய தடங்கண்ணியர் வலையில் அழுந்தாதே
     நாள்ஓடிய நமனார் தமர் நணுகாமுனம் நுணுகி
     ஆளாய் உய்ம்மின் அடிகட்கு இடம் அதுவோ எனில் இதுவே
     நீளோடு அரவு அசைந்தான் இடம் கேதாரம் எனீரே.”
                                            (சுந்தரர்)

                                        -“சிங்காது
     தண்ணிறைந்து நின்றவர்தாஞ்சார் திருகேதாரத்திற்
     பண்ணிறைந்த கீதப் பனுவலே.”           (அருட்பா)


     கோயிலின் பின்புறம் வெள்ளிப்பனி மலையாகக் காணக்கிடக்கும் காட்சி
அற்புதமானது. பக்கத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் கோயிலும் உள்ளது - தரிசிக்க
வேண்டும். திருப்பனந்தாள் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசாமித் தம்பிரான்
மற்றுமுள்ள பெருமக்கள் பலருடைய முயற்சியாலும் ஆதரவாலும்,
திருஞானசம்பந்தர் பதிகக்கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது.  

272/5. நொடித்தான்மலை

திருக்கயிலாயம்

     வடநாட்டுத் தலம்.

     சிவபெருமான் அம்பிகையோடு உடனாகி எழுந்தருளியுள்ள மலை
திருக்கயிலாயம். இம்மலை இமயமலையின் வடக்கில் திபெத் நாட்டின்
மேற்பால் அமைந்துள்ளது.

     இங்கு இயற்கையான கோயிலமைப்பில் பனி மூடியே சிவலிங்கமாகக்
காட்சியளிக்கின்றது. இத்திருமலை எப்பக்கமிருந்து யாரொருவர்
எவ்வண்ணமாக நோக்கினும் அவ்வவர்க்கு அவ்வண்ணமாகவே
அக்கோயிலாகவே காட்சி தருகிறது என்பது இம்மலையின் கண் அமைந்துள்ள
அதிசயமாகும். இதுகண்டு அனுபவித்தோர் வாக்கும் ஆகும். இம்மலையின்
சிகரம் தென்திசை நோக்கியதாக உள்ளது.