பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 829


     29 மைல் சுற்றளவு உடையதாய் விளங்கும் இம்மலையில் சதுரம்,
முக்கோணம், வட்டம் போன்ற சித்திர வேலைப்பாடுடைய மேடைகளும்
காட்சியளிக்கின்றன. இந்தியாவில் கன்னியாகுமரி முதல் இமயம் வரையில்
எத்தனை வகையான கோபுரங்கள் உள்ளனவோ அத்தனை மாதிரிக்
கோபுரங்களும் இக்கயிலை மலையில் காணக்கிடக்கின்றன.

     சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவர் பெருமக்களும் பாடியுள்ளனர்.

     ஞானசம்பந்தர் திருக்காளத்தியைத் (தென் கயிலாயம்) தரிசித்த பின்பு
அங்கிருந்தே கயிலாயம் நோக்கி மனத்தாற்கண்டு பாடிப் பரவினார். அப்பர்
பெருமான், கயிலாயத்தையும், அங்கு ஆளுநாயகன் வீற்றிருக்கும் அற்புதக்
கோலத்தையும் காணுமது காதலித்து நெடிய யாத்திரையை மேற்கொண்டு
சென்றார். இந்த யாத்திரையின் பயனாகவே அவர் ஐயாற்றில் கயிலைத்
தரிசனம் பெற்றார். அப்பர் பெருமான் பாடியுள்ள திருக்கயிலைத்
திருத்தாண்டகங்கள் ‘போற்றித் திருத்தாண்டகங்கள்’ என்று
அழைக்கப்படுகின்றன.

     இறைவனருளால் அஞ்சைக்களத்திலிருந்து வெள்ளையானையேறி
சுந்தரர் கயிலைக்குச் சென்றபோது, திருவருட் கருணையை நினைந்து,
“தானெனை முன்படைத்தான்” என்று தொடங்கும் பதிகம் பாடியவாறே
போற்றிச் சென்றார். இத்திருப்பதிகம் வருணனால் இவ்வுலகில் திருஞ்சைக்
களத்தில் சேர்ப்பிக்கப் பெற்று உலகிற்குக் கிடைத்தது. சேரமான் பெருமாள்
நாயனாரும், காரைக்காலம்மையாரும்கூடக் கயிலாயம் சென்ற வரலாற்றை
நாமறிவோம்.

     கயிலாய யாத்திரைக்கு இந்திய அரசு ஆண்டுதோறும் ஏற்பாடுகளைச்
செய்து தருகிறது. இன்று திருக்கயிலாயம் உள்ள இமயமலைப் பகுதி சீன
அரசின் கட்டுப்பாட்டுள் இருந்து வருகின்றது. ஆண்டுதோறும் கயிலாய
தரிசனத்திற்குச் செல்ல விண்ணப்பித்துக் கொள்ளும் அன்பர்களைத்
தேர்ந்தெடுத்து இந்திய அரசு அனுப்பி வைக்கின்றது. சீன அரசும்
இவர்களுக்கு வசதிகளைச் செய்து தருகின்றது.

     “பொடி கொள் உருவர் புலியின்அதளர் புரிநூல் திகழ்மார்பில்
     கடிகொள் கொன்றை கலந்த நீற்றர் கறைசேர் கண்டத்தர்
     இடியகுரலால் இரியுமடங்கல் தொடங்கு முனைச்சாரல்
     கடிய விடைமேல் கொடியொன்றுடையார் கயிலை மலையாரே.”