பக்கம் எண் :

834 திருமுறைத்தலங்கள்


     கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. மார்கழி மாதத்துத்
திருவெம்பாவை சிறப்பாக நடைபெறுகிறது. அம்பிகை யுற்சவம் ஆடிப்பூர
நாளைத் தீர்த்தமாகக் கொண்டு முன் பத்துநாள் உற்சவம் நடைபெறுகிறது.
அம்பிகைக்குரிய நவராத்திரி நாட்களில் ஸ்ரீ சக்ரபூஜை வெகுசிறப்பாக
நடைபெறுகிறது. இங்ஙனமெல்லாம் நடைபெறும் போது நிரைநிரையாக
அடியார்கள் சாதிமதபேதமின்றி வந்து வழிபட, “நினைத்த காரியம்
அனுகூலமே தரும்” பெருமானாக அவர் பெருமாட்டியாருடன் இங்கே
எழுந்தருளியுள்ளார். ஈழத்திருநாட்டின் பாடல் பெற்ற திருத்தலங்கள்
இரண்டுள் இதுவொன்று, மற்றது திருக்கேதீச்சுரம்.

     திருக்கோணசுவரப் பெருமானின் திருக்கோயில் வரலாறு கூறும்போது,
அயலிலமைந்த தம்பலகாமத்தைப் பற்றிக் கூறாவிட்டால் வரலாறு
பூரணமாகாது. அன்று பறங்கியர் பாழ்படுத்திய வேளையில் பக்தர்களாகிய
பாசுபதவிரதிகளும் பணியாளரும் பதைத்துருகித் திருக்கோயிலிருந்த
திருவுருவங்களை எடுத்துச் சென்று அயலிலுள்ள கிணறுகளிலும் குளங்களிலும்
பாதுகாப்புக்காக இட்டார்கள். அவர்கள் ஒரு திருவுருவத்தை அயலூராய
தம்பலகாமம் என்னும் மருதவளம் நிறைந்த ஊரில் மறைத்து வைத்தார்கள்.
மிகவும் இரகசியமாக வழிபாடு செய்து வந்தவர்கள் அந்த இடத்தை
ஆதிகோணநாயகர் கோயில் என வழங்கி வணங்கினார்கள். அது
ஆதிகோணநாயகர் ஆலயமாகவே பழைய கோணேசுவரர் ஆலயத்துக்குச்
சொந்தமான மானியங்களிற் பெரும்பகுதி தம்பலகாமத்திற்குச் சேர்ந்தன.

     தம்பலகாமத்தருகே பாண்டியன் ஊற்று, திருநகர் முதலிய ஊர்கள்
உள்ளன. முன்னர் முதற் பராந்தக சோழனுக்கு அஞ்சிய பாண்டியன்
இலங்கையில் பாதுகாப்புக்காகப் புகுந்திருந்த காலத்தில் தம்பலகாமத்தில்
திருப்பணிகள் செய்ததாக வரலாறு கூறுகிறது. முன்னர் குளக்கோட்டு மகாராசா
குளங்கள் தொட்டு வளஞ்செய்த காலத்தில் கந்தளாய் முதலிய பெரிய
குளங்களைக் கட்டி அவற்றின் கரைகளில் விநாயகர், வீரபத்திரர், ஐயனார்,
காளி, பைரவர், புலத்தியர் முதலாய திருவுருவங்களை அமைத்தார்.

     தம்பலகாமத்து இராஜகோபுரம் அழகானது, அமைவானது. வயல்சூழ்ந்த
தென்னஞ் சோலைகளுக்கு மேலாகத் திருக்கோபுரக் காட்சி கண்ணையும்
கருத்தையும் வெகுவாகக் கவருகிறது. திருக்கோயில் கர்ப்பக்கிருகம், அர்த்த
மண்டபம், ஸ்நபனமண்டபம், ஸ்தம்பமண்டபம் என்பன யாவும் அமைவாக
வுள்ளது. கற்கோயிலாய இதற்குச் சுற்று