இங்கே செய்த திருப்பணிகள் பற்றிய விவரம் சிதம்பரத்துக் கல்வெட்டுக்களில் உள்ளன. திருக்கேதீஸ்வரத்தைப் பரிபாலித்த சிங்கையாரிய சக்கரவர்த்திகள் தமிழ்நாட்டில் இராமேசுவரத்தையும் பரிபாலித்து வந்தனர். அவர்களின் காசுகளில் சேது என்னும் பெயரும் இடபக்குறியும் இலச்சனையாயிருந்தது. திருக்கேதீஸ்வரம் உருக்குலைந்த போதிலும் சில திருவுருவங்கள் பூமிக்குள் புதைக்கப்பெற்றுப் பாதுகாக்கப் பெற்றன. மாதோட்டம் மண்ணோடு மண்ணாய் உருக்குலைந்து கிடந்தது. எங்கும் காடும் மணலும் மேடுகளும் மண்டிக் கிடந்தன. இருநூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் 1872ஆம் ஆண்டளவில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் சிந்தையில் அந்த இடைமருதின் ஆனந்தத்தேன் சொரியும் பொந்துபோல இந்த இலங்கையிலும் ஒரு தேன் பொந்து திருக்கேதீஸ்வரம் என்னும் எண்ணம் உதித்தது. அதனை அவர் இலங்கை வாழ் சைவமக்களுக்கு நினைவூட்டினார். தமது காலத்திலேயே திருக்கேதீஸ்வரத்திற்கு அதற்குரிய நாற்பது ஏக்கர் நிலத்திலேயே பழையபடி உருப்பெற்றுச் சாந்நித்தியம் பெறுவதற்கான முயற்சியைச் செய்தார். நாவலர் அவர்கள் நவின்றதைக் கேட்ட சைவ மக்கள் இருபது ஆண்டுகளாக முயற்சி செய்து 1893ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் திருக்கேதீஸ்வரத்தைச் சேர்ந்த நாற்பது ஏக்கர் நிலத்தைப் பகிரங்க ஏலத்தில் விலைக்குப் பெற்றுத் திருப்பணி வேலைகள் செய்யத் தொடங்கினார்கள். நிலத்தை வாங்குவதற்கு பொதுமக்கள் சார்பில் முன்னின்று பழநியப்ப செட்டியார் அவர்களும், திருப்பணி வேலைகளில் முன்னின்று உழைத்த பசுபதிச் செட்டியார், நீராவியடிவை. ஆறுமுகம், வைத்தியர் இராமுப்பிள்ளை, இராகவப்பிள்ளை முதலானோரும் குறிப்பிடத்தக்க சைவச் சான்றோர் ஆவர். திருப்பணி வேலைகள் தொடங்கிய நாள்களில் காடுவெட்டிப் பூமிதிருத்திய வேளையில் பழைய கர்ப்பக்கிருகம், அர்த்தமண்டபம், பலிபீடம், துவசத்தம்பம் முதலியன அமைந்த இடங்களைக் கண்டனர். தெய்வச் செயலாகத் தொடர்ந்து பழைய சிவலிங்கம், நந்தி, விநாயகர் முதலிய திருவுருவங்கள் கிடைத்தன. அங்கே கிடைத்த மிகப் பெரிய சிவலிங்கமே இன்றைய மகாலிங்கம், அவரை வெளியில் எடுத்தபோது ஒரு சிறு பழுது உண்டாகவே, அவரை வெளியில் பிராகாரத்தில் ஒதுக்கமான இடத்தில் எழுந்தருளச் செய்தனர். |