பக்கம் எண் :

838 திருமுறைத்தலங்கள்


     இவ்வாறாக ஆலயத்துக்கு வேண்டிய அத்தியாவசிய அமைப்புகளைக்
கட்டியெழுப்பியதும், சோபகிருது வருடம் ஆனித்திங்கள் வளர்பிறை சதுர்த்தசி
28-6-1903ஆம் நாளில் மகாகும்பாபிடேகத்தை ஆகமவிதிப் பிராகாரம்
செய்தார்கள். மேலும் தொடர்ந்து திருப்பணி வேலைகளைச் செய்த பின்னர்,
1910ஆம் ஆண்டிலும் ஒரு கும்பாபிடேகம் செய்தார்கள்.

     பின்னர் ஆர்வமிக்க கொழும்புவாசிகள் 19-10-1948 ஆம் நாளில்
ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டம் ஒன்றைக் கூட்டி முந்திய பழைய
அடியார்களோடு சேர்ந்து திருப்பணி வேலைகளில் ஈடுபட்டபோது, குலசேகர
பட்டினத்தைச் சேர்ந்த சோமசுந்தரச் செட்டியார் என்னும் வணிகர் தமது
சொந்தப் பொறுப்பில் 1952-ஆம் ஆண்டில் ஒரு கும்பாபிடேகத்தைச் செய்து
நிறைவேற்றினார்கள். அப்பெரிய வணிகனாரே பின்னர்த் துறவு பூண்டு
மதுரைத் திருஞானசம்பந்தர் திருமடத்துக் குருமகா சந்நிதானமாக
எழுந்தருளியிருந்தார்.

     பின்னர் காடடர்ந்து மிருகங்களின் உறைவிடமாய்ப் போக்குவரத்துப்
பாதைகள் வசதிகளற்றுக் கிடந்த இடத்தில் 1903ஆம் ஆண்டின் பின்
ஓரளவுக்கு ஒளிவீசிய வழியில் 1910ஆம் ஆண்டு கும்பாபிடேகம். பின்னர்
1952ஆம் ஆண்டில் அருமையாக நடைபெற்ற கும்பாபிடேகத்தைச் சைவப்
பெரியார் புலோலி சிவபாத சுந்தரம் முதலானோர் முன்னின்று செய்தனர்.
அதுமுதல் ஆலய பரிபாலனம் நாட்டுக்கோட்டைச் செட்டிமாரிடமிருந்து
ஈழத்துச் சிவனடியார்களிடம் சேர்ந்தது.

     சிவபாதசுந்தரனார் தமது பொறுப்பில் ஆடவல்லானின் அற்புதத்
திருவுருவத்தை வார்த்துக் கொடுத்தார். இன்று புதியவர் புதுப்பொலிவோடு
வந்திருந்தும் பழையவர் அங்கே ஆடிக்கொண்டே இருக்கிறார்.

     ஆலய பரிபாலன சபையர் மேலும் புரனமைப்பு செய்வதற்கு ஸ்ரீலஸ்ரீ
ஈசான சிவாசாரியார் அவர்களை வரவேற்றனர். இவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக
நாவலர் அவர்களின் மாணாக்கர். காசிவாசி செந்திநாதஐயர் அவர்களின்
மாணாக்கர் எழுவருள் ஒருவராவர். இவருடைய மேற்பார்வையில்
தமிழ்நாட்டுக் கைத்திறன் வாய்ந்த ஸ்தபதியர்கள் பணிசெய்து 31-10-60 ஆம்
நாளிலும், பின்னர் 6-6-71ஆம் நாளிலும் கும்பாபிடேங்கள் நடைபெற்றன.
அண்மையில் 4-7-76ஆம் நாள் மிகப்பெரிய கும்பாபிடேகம் நடைபெற்றது.