திருவாசகத் தலம். புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கிக்குப் பக்கத்தில் உள்ளது. அறந்தாங்கி - மீமிசல் பாதையில், அறந்தாங்கியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சியிலிருந்து புதுக்கோட்டை அறந்தாங்கி வழியாகவும், தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாகவும், மதுரையிலிருந்து திருப்பத்தூர் காரைக்குடி அறந்தாங்கி வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம். மக்கள் வழக்கில் இன்று இத்தலம் ஆவுடையார் கோயில் என்று வழங்குகிறது. ஊர் - பெருந்துறை. கோயில் - ஆவுடையார் கோயில். கோயிற் பெயரான ஆவுடையார் கோயில் என்பதே ஊருக்குப் பெயராக வழங்குகிறது. சிறிய ஊர். அருகில் செல்லும்போதே கோபுரம் காட்சியளிக்கின்றது. அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக இருந்த வாதவூரர் கீழ்கடற் கரைக்குக் குதிரை வாங்கச் சென்றபோது அவரைக் குருந்த மரத்தின் கீழிருந்து குருவடிவில் இறைவன் ஆட்கொண்டு, அவரை மாணிக்கவாசகராக ஆக்கிய மாட்சிமை பெற்ற தலம். மாணிக்கவாசகர் அருள் பெற்ற புண்ணிய பூமி. அருபரத்து ஒருவன் குருபரனாக வந்து காட்சி தந்த பதி. இத்திருக்கோயில், இறைவனின் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்டது. கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். பண்டைநாளில் ஸ்தபதிகள் கோயில் கட்டுவதற்கு உடன்படிக்கை எழுதுங்கால் ஆவுடையார் கோயில் கொடுங்கைகளைப் போலத் தங்களால் அமைக்க முடியாது என்பதைக் குறிக்கும் வகையில் “ஆவுடையார் கோயில் கொடுங்கைகள் நீங்கலாக” என்று எழுதும் வழக்கம் இருந்ததாம். பெரிய கனமுடைய கருங்கல்லை, மெல்லியதாக இழைத்து, பல மடிப்புக்களாக அமைந்துள்ள இக்கலைத்திறனைப் பார்க்குங்கால் நம் அறிவுக்கும் எட்டாத அபூர்வ ஆற்றலை அறிந்தின்புறலாம். திருவாவடுதுறை ஆதீனத்தின் அருளாட்சிக்குட்பட்ட கோயில். ஆதினக் கட்டளைத் தம்பிரான் ஒருவர் இங்கிருந்து கோயிலைக் கவனித்து வருகிறார். இறைவன் - ஆம்நாதசுவாமி, குருசுவாமி, பரமசுவாமி, ஆத்மநாதர். இறைவி - யோகாம்பாள். தலமரம் - குருந்த மரம் தீர்த்தம் - அக்கினித் தீர்த்தம் (திருத்தமரம் பொய்கை) உலகவுயிர்கள் வீடுபேறு பெறுவதற்குச் சாதனமாகப் பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்குத் துணையாக - பெரும் துறையாக |