பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 849


விளங்கும் தலம் ஆதலின் பெருந்துறை எனப் பெயர் பெற்றது. வெள்ளாறு
(சுவேதநதி) பாய்கின்ற வயற்பரப்புக்கள் நிறைந்த பகுதி. “தெள்ளுநீர்
வெள்ளாறுபாய் ; திருமிழலை நாட்டுப் பெருந்துறை” என்பது சிவலோக
நாயகி பொன்னூசலில் வருந்தொடர்.

     திருவாசகத்திலுள்ள 51 பகுதிகளுள் 20 பகுதிகள் (சிவபுராணம்,
திருச்சதகம், திருப்பள்ளியெழுச்சி, செத்திலாப்பத்து, அடைக்கலப் பத்து,
ஆசைப்பத்து, அதிசயப்பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து,
பிரார்த்தனைப்பத்து, குழைத்தபத்து, உயிருண்ணிப்பத்து, பாண்டிப்பதிகம்,
திருவேசறவு, அற்புதப்பத்து, சென்னிப்பத்து, திருவார்த்தை, திருவெண்பா,
பண்டாய நான்மறை) இத்தலத்தில் பாடப் பெற்றவை.

     இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள் :- அனாதிமூர்த்தத்தலம், ஆதி
கயிலாயம், உபதேசத்தலம், குருந்தவனம், சதுர்வேதபுரம், சதுர்வேத மங்கலம்,
ஞானபுரம், சிவபுரம், திருமூர்த்திபுரம், தட்சிண கயிலாயம், யோகவனம்
முதலியன.

     ஆத்மநாதருக்கு 18 பெயர்கள் வழங்கப்படுகின்றன. அவை. 1) ஆத்ம
நாதர் 2) பரமசுவாமி 3) திருமூர்த்திதேசிகர் 4) சதுர்வேதபுரீசர் 5) சிவயோக
வனத்தீசர் 6) குந்தகவனேசர் 7) சிவக்ஷேத்ரநாதர் 8) சன்னவனேசர்
9) சன்னவ நாதர் 10) மாயபுர நாயகர் 11) விப்பிரதேசிகர் 12) சப்தநாதர்
13) பிரகத்தீசர் 14) திருதசதேசிகர் 15) அசுவநாதர் 16) சிவபுரநாயகர்
17) மகாதேவர் 18) திரிலோககுரு என்பன. மற்றும் ஷடாராதனர் என்ற
பெயருமுண்டு.

     சிவாலயங்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கியிருக்கும். சில மேற்கு
நோக்கியிருக்கும். ஆனால் குருமூர்த்தமாக அமைந்த இத்திருக்கோயில்
தெற்கு நோக்கியுள்ளது. தவிர, சிவாலயங்களில் இறைவன் சிவலிங்கபாண
வடிவில் அருவுருவாகக் காட்சிதர, இக்கோயிலில் மட்டும் குருந்தம் மேவிய
குருபரனான ஆத்மநாதர் அருவமாக இருந்து சித்தத்தைச் சிவமாக்கும்
சித்தினைச் செய்தருளுகின்றார். ஆறாதாரங்களை நினைவூட்டும் வகையில்
கனகசபை முதலான ஆறு சபைகளும் இக்கோயிலில் உள்ளன.
திருப்பரங்குன்றத் திருப்புகழில் “அருக்கு மங்கையர்” என்று தொடங்கும்
பாடலில் “வழியடியர் திருக்குந்தடி அருள் பெற அருளிய குருநாதர்” என்று
ஆத்மநாதசுவாமி போற்றப்படுகிறார்.

     ஆத்மலிங்க வடிவில் இறைவன் இப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள
சிறப்பை - அருவ நிலையை - ஆத்மசொரூபமாக உள்ள நிலையை