“பார்த்து நாம் குருவாய் வந்தனுக்கிரம் பதனமாய் வைத்து மனத்துள்ளே - நிதம் பத்திசெய் வேறொன்றுமில்லை யில்லை - இது பரம ரகசியம் என்று கொள்ளே” - என்று மாணிக்கவாசகர் விலாசம் என்னும் பழைய நூல் புகழ்கிறது. இத்தலம் வனம், தலம், புரம், தீர்த்தம், மூர்த்தி, தொண்டர் எனும் 6 சிறப்புக்கள் அமைந்தது. (1) வனம் - குருந்தவனம் (2) தலம் - தீர்த்தத்தலம் (3) புரம் - சிவபுரம் (4) தீர்த்தம் - திருத்தமாம் பொய்கை (5) மூர்த்தி - ஆத்மநாதர் (6) தொண்டர் - மாணிக்கவாசகர். கோயிலின் முன்புறம் திருவாவடுதுறை ஆதீனப் பெயர்ப் பலகையுள்ளது. எதிரில் சற்று உள்ளடங்கி, குளமொன்று உள்ளது - பயன் படுத்தும் நிலையில் இல்லை. சாலையிலிருந்து கோயிலுள் நுழையும் முன்பு மண்டபத்தின் மேற்புறம் குருந்தமர உபதேசக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் சுற்றிலும் கடைகள், மண்டபத்தின் விதானம் மரத்தாலாகியது. பார்வையைச் சற்று உயர்த்தினால் மேற்புறக் கொடுங்கையின் மேலே ஒரு குரங்கும் (கீழ்நோக்கியவாறு), ஒரு உடும்பும் (மேல் நோக்கியவாறு) செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அலைபாயும் குரங்கு மனத்தை அடக்கி, ஆத்மநாதரின் திருவடியில் உடும்புப் பிடிபோல நிறுத்தி - அவருடைய திருவடிகளைச் சிக்கென பிடித்து, உய்வுபெற வேண்டுமென்னும் எண்ணத்துடன் உள்ளே செல்க என்று நமக்கு உணர்த்துவதுபோல இஃது உள்ளது. அடுத்துள்ள மண்டபம் பெரியது - ரகுநாத பூபால மண்டபம். அற்புதமான வேலைப்பாடுடைய பெரிய மூர்த்தங்கள், அகோர வீரபத்திரரும், ரண வீரபத்திரரும் உட்புறமாகத் திரும்பியவாறு தரிசனம் தருகின்றனர். மத்தியில் மேற்புறத்தில் விராட் சொரூபம் வண்ணத்தில், பாலவனம் ஜமீன்தாரர்களின் முன்னோர்களான வேதவனப் பண்டாரம், ஆறுமுகப் பண்டாரம் ஆகியோர்களால் இம்மண்டபம் 330 ஆண்டுகட்கு முன் கட்டப்பட்டதாம். இடப்பால் சிவானந்த மாணிக்கவாசகர் சந்நிதி. வலமாகச் சுற்றி வரும்போது துவாரபாலகர்களையும் விநாயகரையும் தரிசிக்கிறோம். சுவரில் வண்ண ஓவியங்கள் மிகப்பழமையானவை. அழிந்த நிலையில் உள்ளன. அவற்றுள் ஒன்று. ‘அண்டரண்ட பட்சி’யின் வண்ண ஓவியம். இப்பறவை இரண்டு யானைகளை ஒருசேரத் தூக்குமளவுக்கு வலிமையுடைய பறவை |