யாகத் திகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. பாம்பன் சுவாமிகள் பாடியுள்ள வீரபத்திரச் சக்கரத்தின் வண்ண ஓவியம் உள்ளது. அட்டாங்க யோக வளர்ச்சிச் சிற்பங்கள் மேற்புறத்தில் உள்ளன. தூணில் கண்ணப்பர், கண்களை அப்பும் கோலம் முதலியவைகளையும் காணலாம். மண்டபத்தின் ஓரங்களில் அமைந்துள்ள கொடுங்கைகளின் அழகைக் கண்டு ஆனந்தம் பெறலாம். அடுத்துள்ளது ராஜகோபுரம் - முன்பு ஐந்து நிலைகளாக இருந்ததை மாற்றி ஏழுநிலைகளாக்கித் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இதற்கான மகாகும்பாபிஷேகம் 27-6-1990 அன்று நடைபெற்றது. நெடிதுயர்ந்த ராஜகோபுரம், தொலைவில் வரும்போதே வா என்று அழைக்கும் வான்கருணைச் சான்றான ஆத்மநாத ஸ்வரூபத்தின் ஸ்தூல அடையாளம். ராஜகோபுரத்தின் வழியே உட்செல்லும்போது வாயிலின் இடப்பக்கத்தில் - சுவரில் - வள்ளல் பச்சையப்பர் இக்கோயிலுக்கு வைத்துள்ள தர்மத்தைப் பற்றிய சாசனக் கல்வெட்டு, பதிக்கப்பட்டு உள்ளது. அதில் உள்ள விவரம் வருமாறு :- ஆவுடையார்கோயில் காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியாருடைய தர்மம் சகலருக்கும் பிரசித்தியாகத் தெரியும் பொருட்டு நிரந்தரமான ஞாபகத்தின் பொருட்டுச் செய்ய விளம்பரமாவது :- இறந்துபோன புண்ணிய புருஷராகிய மேற்படி பச்சையப்ப முதலியார் அவர்களாலே வைக்கப்பட்டிருக்கும் லட்சம் வராகனுக்கு வரப்பட்ட வட்டிப்பணத்தினின்றும் ஆவுடையார்கோயிலில் சாயரக்ஷை கட்டளைத் தர்மமானது. கனம் பொருந்திய சுப்ரீம் கோர்ட் கவர்ன்மெண்டு அதிகாரிகளால் தர்ம விசாரணைக் கர்த்தர்களாக நியமிக்கப்பட்டுச் சென்னப் பட்டணத்திலிருக்கும் இந்து சபையாரவர்களுடைய உத்திரவின்படி சாலிவாகன சகாப்தம் 1764-ஆம் வருஷத்து சரியான சுபகிருது வருடம் முதல் வருஷம் தவறாது 120 வராகன் செலவுள்ளதாக நடந்து வருகின்றது. மேற்படி மூலதனம் சுப்ரீம் கோர்ட்டு அதிகாரிகளுடைய உத்திரவின்படி சென்னப் பட்டணத்திலிருக்கும் ஜெனரல் திரேசரி (General Treasury) என்னும் கவர்ன்மெண்டாருடைய பொக்கிஷத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது. மேற்படி தர்மம் கிரமமாக நடவாவிட்டால் தர்மத்தில் சிரத்தையுள்ளவர் மேற்படி சபையாரவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது.” உள்கோபுரத்தையும் தாண்டுகிறோம். அடுத்துள்ளது பஞ்சாட்சர மண்டபம். உட்புகுமுன் நம் நினைவுக்கு ஒரு குறிப்பு :- |