வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு விரவியவா கண்டு அதற்கு வீடு காட்டிப் பத்தர்களுக்கு இன்னமுதாம் பாசூர்மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உயர்ந்தவாறே.’ (அப்பர்) -‘ஞாலஞ்சேர் மாசூரகற்று மதியுடையோர் சூழ்ந்த திருப் பாசூரில் உண்மைப் பரத்துவமே.’ (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. வாசீஸ்வரர் திருக்கோயில் திருப்பாச்சூர் கிராமம் - கடம்பத்தூர் அஞ்சல் - 631 203 (வழி) திருவள்ளூர் - திருவள்ளூர் மாவட்டம். 17. திருவெண்பாக்கம் பூண்டி (நீர்த்தேக்கம்) | தொண்டை நாட்டுத் தலம். திருவள்ளூரிலிருந்து செல்லப் பேருந்து வசதியுள்ளது. பூண்டி நீர்த்தேக்கம் - அணைப்பகுதி - மக்கள் சுற்றுலா இடமாகவும் திகழ்கின்றது. பழைய கோயில் திருவிளம்பூதூரில் இருந்தது. இவ்வூர் குசஸ்தலையாற்றின் கரையில் இருந்தது. திருவிளம்பூதூருக்குப் பத்ரிகாரண்யம் என்றும் பெயர். (இலந்தை மரக்காட்டுப் பகுதி) சுந்தரருக்கு ஊன்றுகோலை இறைவன் அளித்தருளிய தலம். 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் பல கல்வெட்டுக்களையும் கொண்டிருந்தது. சென்னையின் குடிநீர்த்தேவையைப் போக்க, குசஸ்தலையாற்றில் அணையைக்கட்ட 1942ல் அரசு முயற்சிகளை மேற்கொண்டது. அதற்காக அணைகட்ட நிலப்பகுதிகளை எடுத்துக் கொண்டபோது அப்பகுதியில் திருவிளம்பூதூரும் அடங்கிற்று. வெண்பாக்கம் தற்போது பூண்டி நீர்த்தேக்கமாகவுள்ளது. |