பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 853


     “பொருந்துதில்லை வனம் கடந்துபோந்து வேந்தற்சேர்ந்தருளின்
     வருந்த விடலந்தனிலிருந்த மறையோனாகி மறையோர்கட்
     கிரங்கியருங் கீழ் நீர் காட்டி யிடங்கள் மீட்ட பெருமானே
     குருந்த வரம்பிற் கரந்த மறைக் கொழுந்தே செழும் பொற்றாள்
                                                போற்றி.”

     இங்குள்ள தூண் ஒன்றில் இருதலைகளும் ஓருடலும் கொண்டு பின்னிய
நிலையிலுள்ள பாம்பும்; ஒன்றில் சாமுத்ரிகாலட்சணத்தைக் காட்டும் பெண்
முதலான சிற்பங்களும் உள்ளன.

     இடப்பால் மாணிக்கவாசகர் மூலத்தானம். கிழக்கு நோக்கியது. இங்குள்ள
தூண் ஒன்றில் நவக்கிரகங்கள் கல்லில் அடித்து வைக்கப் பட்டுள்ளன.
தனியாக இக்கோயிலில் நவக்கிரக சந்நிதியில்லை. சந்நிதி மேற்புறத்தில் 27
நட்சத்திர வடிவங்களும் கல்லிற் செதுக்கப்பட்டுள்ளன. எதிரில் உள்ள
தூண்களில் ஆதீனக் குருமூர்த்திகள், கட்டளைத் தம்பிரான்கள் காட்சி
தருகின்றனர். சந்நிதியின் வெளிச்சுவரில் வண்ண ஓவியத்தில்
ஸ்பரிச/உபதேச/திருவடி தீட்சை ஓவியங்கள் உள்ளன. வலமாக வரும்போது
திருவிளையாடற்புராண வரலாறுகளுள் பிறவும் வண்ணத்தில் இருப்பதைக்
காணலாம்.

     2. அடுத்தது நிருத்த மண்டபம் - நடனசபை, நர்த்தன சபை.
இடப்பால் குறவன், குறத்தி சிலைகள். அற்புதமான கலையழகு,
தலைக்கொண்டை முதல் ஒவ்வொரு உறுப்பையும், கை விரல் ரேகைகள்
கூடத் தெளிவாகத் தெரியும் வண்ணம் செதுக்கியுள்ள கைவண்ணம் -
வேடனின் நளினத்தோற்றம் - இவ்வாறே வலப்பால் காட்சிதரும் வேடன்
வேடுவச்சி சிற்பங்கள் - அற்புதமான கலையழகு கருவூலங்கள். கண்களுக்குக்
கொள்ளையழகு. சோமாசிமாற நாயனார் செய்த யாகத்திற்கு இறைவன் சென்ற
வடிவம் இஃதுதானே ! நினைத்தாலே புல்லரிக்கும், மெய்சிலிர்க்கும்.
தலையழகுக் கோலங்கள் சங்கநிதி, பதுமநிதி சிற்பங்கள் - சற்று உள்ளே
சென்றால் இடப்பால் வியாக்ரபாதரும் வலப்பால் பதஞ்சலியும் உள்ளனர்.
மற்றோர் இடத்தில் யாக்ஞவல்கியர் ஜனகர் உருவங்கள், நிருத்த மண்டபம்
என்பதற்கேற்ப கல்விளக்குத் தூண் ஒன்றில் நிருத்த (நடன) சிற்பங்கள்
ஒன்றின் கீழ் ஒன்றாக உள்ளன.

     3. வாயிலைக் கடந்து உட்புகுந்தால் அடுத்து வருவது தேவசபை -
சுந்தர பாண்டிய மண்டபம் (சுந்தர பாண்டிய மன்னனால் புதுப்பிக்கப்
பட்டதாதலின் இப்பெயர் பெற்றது) இடப்பால் பிராகாரத்தில் மாணிக்கவாசகர்
உற்வச மூர்த்தி சந்நிதி. இப்பெருமானைத் தரிசித்து விட்டுத்தான் உள்ளே
மூலவரைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்