| ஆவுடையார் - நம்மை ஆளுடையார். சதுரபீடம். மேலே சிவலிங்க பாணமில்லை. ஆத்மநாதசுவாமி அருவமாகக் காட்சியளிக்கிறார். அதற்குரிய இடத்தில் தங்கத்தாலான குவளை (ஆவுடையாரின் மேலே) சார்த்தி வைக்கப்பட்டுள்ளது. பின்னால் 27 நட்சத்திரங்களைக் கொண்டதான திருவாசி உள்ளது. அதன் மேலே மூன்று விளக்குகளை வைத்துள்ளனர். அவற்றுள் சிவப்பு அக்கினியையும், வெண்மை சூரியனையும், பச்சை சந்திரனையும் குறிக்கின்றதென்பர். சுவாமிக்கு முன்னால் இரு தூங்கா விளக்குகள் சுடர் விடுகின்றன. மண்ணிலே பிறந்து இறந்து மண்ணாவதற்கு ஒருப்படுகின்ற நம்மை, அண்ணல் ஆட்கொண்டு அடியரிற்கூட்டிய ‘அதிசயத்தை’ அகம் நெகிழ நினைத்து, கண்ணீர் பெருக்கி, கையாரத் தொழுது, வாய்குளிரப் பாடி, “சடையவனே! தளர்ந்தேன் எம்பிரான் என்னைத் தாங்கிக் கொள்ளே” என்று பிரார்த்திக்கின்றோம். சேர்ந்தறியாக் கையானிடம் கைகளைச் சேர்த்துக் குவித்து, நெஞ்சிற்குடி கொண்ட நீலமேனியைத் தியானிக்கின்றோம். “சீரார் பெருந்துறை நம் தேவனடி போற்றி ஆராத இன்பம் அருளுமலை போற்றி” பிரிய மனமின்றித் தரிசித்தவாறே வெளியே வந்து பக்கத்தில் சென்றால் தியாகராஜ மண்டபத்தை அடையலாம். வழியில் வெயிலுகந்த விநாயகர் வீற்றிருக்கின்றார். பக்கத்தில் அக்கினித்தீர்த்தம் “இதற்குத் திருத்தமாம் பொய்கை” என்று பெயர். தியாகராஜ மண்டபத்தில் மகாலிங்கமூர்த்தி தரிசனம் தருகிறார். எதிரில் முத்து விநாயகர் மண்டபத்தின் மேற்கூரையில் தொங்கும் கற்சங்கிலிகள் கண்களைக் கவர்கின்றன. கொடுங்கைகளின் அற்புதத்தை இம்மண்டபத்தில் காணலாம். எவ்வளவு கனமான கருங்கல்லை எந்த அளவுக்கு மெல்லியதாக இழைத்து, எத்தனை எத்தனை மடிப்புக்களாகக் கொண்டு வந்துள்ளார்கள் என்பதைக் கண்டு வியப்படைவதற்காக இடப்பக்கத்தின் கோடியில் இரண்டு மூன்றிடங்களில் துளையிட்டுக் காட்டியுள்ளார்கள். விழா நாள்களில் மாணிக்கவாசகர் இம்மண்டபத்திற்கு எழுந்தருளி, இருந்து, பின் புறப்பாடாகிறார். மண்டபத்தைக் கண்டு வியந்த நமக்கு அடுத்த தரிசனம் தலமரங்களான இருகுருந்த மரங்கள்தாம். இம்மரத்தினடியில் தானே பெருமான் வந்தமர்ந்தார் என்று நினைக்கையில் விழிநீர் பெருக்கி, இம்மரத்திற்குக் கிடைத்த பேறு கூட நமக்குக் கிடைக்க வில்லையே என்றெண்ணித் தொழுகிறோம். வலமாக வெளியேறுகிறோம். கோயிலின் பக்கத்திலுள்ள தெருக்கோடியில் ஆதீனத்தின் கோயில் நிர்வாக அலுவலகம் உள்ளது. |