| மறைந்தார். குழந்தைகள் விழித்து, மகிழ்ந்து, தத்தம் பெற்றோர்களிடம் செய்தியைச் சொல்ல ; வந்தவர் இறைவனே என்று மகிழ்ந்து வணங்கினர். அன்று முதல் சுவாமிக்கு மேற் சொல்லியவாறே நிவேதனம் செய்யப்பட்டு வருகின்றது. இறைவன் குழந்தைகட்கு வேதசாத்திரங்களை ஓதுவித்த இடமாகிய குருந்தவனத்தில் ஸ்ரீ வித்யா கணபதி எழுந்தருளியுள்ளார். இம்மரபினரே நம்பியார் என்போர். இவர்களே ஆத்மநாதசுவாமி பூஜை செய்து வருகின்றனர். (2) கீழ் நீர் வெட்டிக் காட்டியது. பாண்டிய மன்னனின் ஆட்சிக்காலத்தில் துண்டகன் என்னும் அமைச்சன் இருந்தான். அவன் பேராசை கொண்டவன். சிவபுரம் என்னும் இக்கிராமத்தின் வளத்தைக் கேள்வியுற்று அக்கிராமத்தைத் தான் அடைய எண்ணினான். அக்கிராமம் தனக்குச் சொந்தமானது என்றும், அந்தணர்கள் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகவும் மன்னனிடம் சொல்லிவிட்டுச் சிவபுரம் வந்து அதிகார பலத்தால் அந்தணர்களை விரட்டியடித்தான் ; எல்லைக்கற்களை யெல்லாம் எடுத்தெறிந்தான். மறையவர்கள் செய்வதறியாமல், அவனை எதிர்க்க மாட்டாமல் சொத்துக்களை இழந்து அலைந்தனர். ஆத்மநாதரே கதி என்று அழுது வேண்டினர். அவர்க்கருள விரும்பிய ஆத்மநாதர் வயது முதிர்ந்தவராக வேடங்கொண்டு அந்தணர்களிடம் சென்று, “என் பெயர் பரமசுவாமி, தில்லையிலிருந்து வருகின்றேன். உங்கள் கிராமத்தைப் பற்றிய விவரமனைத்தும் எனக்குத் தெரியும். உங்கள் நிலையை அறிந்துதான் நான் வந்துள்ளேன். என்னிடமுள்ள பட்டயத்தைக் காட்டி உங்களுடைய பூமியை மீட்டுத் தருகின்றேன். அப்படி மீட்டுத் தந்தால் நீங்கள் எல்லோரும் சேர்ந்து 300ல் 1 பங்கை எனக்குத் தரவேண்டும்” என்றார். அதுகேட்ட அந்தணர்கள், துண்டகனின் கொடுமையைக் கூறி அவரைத் தடுத்தனர். வந்த பெரியவர் அவர்களைத் தைரியப்படுத்தி அழைத்துக் கொண்டு மதுரை வந்தார். வீதியில் உரக்கக் கூவினார். மன்னனுக்குச் செய்தி தெரிந்தது. அவரை அழைத்து அமர்த்தி விவரம் கேட்டான். சிவபுர மகிமையையும், அரசனுடைய குலப்பெருமையையும் எடுத்துரைத்துத் தன் வசமிருந்த பட்டயத்தைக் காட்டினார். சினந்த மன்னன் அமைச்சனை அழைத்து விசாரிக்க, அவனும் தன்னிடமிருந்த பட்டயத்தைக் காட்டினான். இருபட்டயங்களையும் பார்த்த மன்னன் செய்வதறியாது திகைத்து, இருவரையும் அந்தப் பூமிக்குரிய அடையாளங்களைச் சொல்லுமாறு கேட்டான். |