| அமைச்சனோ தன் பூமியில் எவ்வளவு வெட்டினாலும் தண்ணீர் வராது என்று சொன்னான். பெரியவரோ தன் பூமியில் வெட்டினால் நீர் வரும் என்றார். பாண்டியன் இருவரையும் அழைத்துக்கொண்டு சிவபுரம் வந்தான். கோயிலின் ஈசான திசையில் உயர்ந்த மேட்டில் நீரை வரவழைக்குமாறு கூறினான். பெரியவர் அதற்குடன்பட்டு, அனைத்துத் தீர்த்தங்களையும் அவ்விடத்தில் வருமாறு சங்கற்பித்து, பூமியை வெட்டிக் கீழ் நீரை மேலே வரச் செய்து வெளிப்படுத்தினார். அத்துடன் பூமியின் நான்கு எல்லைகளையும் அடையாளம் காட்டினார். பாண்டியன் துண்டகனைத் தண்டித்ததுடன் அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கிவிட்டு மதுரை திரும்பினான். அந்தணர்கள் தங்கட்குப் பூமியை மீட்டுத் தந்த பெரியவர் ஆத்மநாத சுவாமியே என்று துதித்து, அவரைப் பிரம்ம ரதத்தில் ஏற்றி, உபசரித்து, ஊர்வலமாக அழைத்து வந்து, வாக்களித்தபடியே அவருக்கும் ஒரு பங்கை அளித்து, தங்களோடு அவரையும் சேர்த்துக் கொண்டனர். அவரும் (இறைவனும்) அவர்களோடு சேர்ந்து முந்நூற் றொருவராக ஆனார். தில்லை தீக்ஷிதர்கள் நடராசப் பெருமானை உள்ளிட்ட மூவாயிரவர் என்பது போல, இத்தலத்தில் “நம்பியார்கள்” ஆத்மநாதரை உள்ளிட்ட 301 பேர் என்று சொல்லப்படுகிறது. ஆவணி மூலத்தில் குதிரைகள் வரும் என்று சொல்லச் செய்த பெருமான் அவ்வாறே நரிகளைக் குதிரைகளாக்கிக் கொண்டு சென்றார். அவ்வாறு செய்த இடம் நரிக்குடி என்று இன்று வழங்குகிறது. சிவபுராணம் “ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலனடி போற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி சீரார் பெருந்துறை நம்தேவனடி போற்றி ஆராத இன்பம் அருளுமலை போற்றி” திருச்சதகம் “ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வானோர் குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி வருகஎன் றென்னைநின்பால் வணங்கிடவேண்டும் போற்றி தருக நின்பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே” |