பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 869


3. திருஉத்தரகோசமங்கை

     பாண்டிய நாட்டில் உள்ள தலம். திருவாசகத்தில் பலவிடங்களிலும் (38
இடங்களில்) இத்தலம் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. இரயில் நிலையம்.

     மதுரை - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ; பரமக்குடி,
சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, (இராமநாதபுரத்திற்கு 10 கி.மீ.
முன்பாகவே) வலப்புறமாகப் பிரிந்து செல்லும் தூத்துக்குடி - திருச்செந்தூர்
சாலையில் சென்று, உத்தரகோசமங்கை ரயில்வே லெவல் கிராஸிங்கைத்
தாண்டி, 7 கி.மீ. சென்றால் இத்தலத்தையடையலாம். சாலை பிரியுமிடத்தில்
கோயில் பெயர்ப் பலகையுள்ளது. ஊருக்கு அருகாமையில் செல்லும்போதே
கோபுரம் உயர்ந்து தெரிகிறது. கோயில் வரை வாகனங்கள் செல்லும்.

     இராமநாதபுரம் சமஸ்தானத் தேவஸ்தானத்திற்குரிய திருக்கோயில்.
சேதுபதி மகாராஜா குடும்பத்தினரே பரம்பரை அறங்காவலராவர்.
தற்போதுள்ள சேதுபதி மகாராணி திருமதி. இந்திராதேவி நாச்சியார் அவர்கள்
பரம்பரை அறங்காவலராக இருந்து வருகிறார்கள். சமஸ்தான திவான்
நிர்வாகச் செயலராக இருந்து, கோயில் நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார்.
பழமையான திருக்கோயில் - தோற்றத்திலும் அவ்வாறே காட்சியளிக்கிறது.

     இறைவன் - மங்களேசுவரர், மங்களநாதர், காட்சி கொடுத்த நாயகர்,
பிரளயாகேசுவரர்.
     இறைவி - மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி
     நடராசர் - இரத்தின சபாபதி, ஆதிசிதம்பரேசர்.
     தலமரம் - இலந்தை.

     தீர்த்தம் - அக்கினி தீர்த்தம். கோயிலுள் உள்ளது. இது தவிர,
கோயிலுக்கு வெளியில் பிரம்ம தீர்த்தமும், சற்றுத் தள்ளி ‘மொய்யார் தடம்
பொய்கை’த் தீர்த்தமும், வியாச தீர்த்தம் சீதள தீர்த்தம் முதலியனவும்
உள்ளன. கோயிலுள் மங்கள தீர்த்தமும் உள்ளது.

     உத்தரம் - உபதேசம் ; கோசம் - ரகசியம் ; மங்கை - பார்வதி.
பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை
உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது.
மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சி தந்த சிறப்புடைய இத்தலத்தில்
வேதவியாசர், காகபுஜண்டரிஷி, மிருகண்டு முனிவர்,