பக்கம் எண் :

870 திருமுறைத்தலங்கள்


வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர் முதலியோர் வழிபட்டுப் பேறு
பெற்றுள்ளனர். அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற பதி. தட்சிண கயிலாயம்,
பத்ரிகாரண்யம் (இலந்தைவனம்), வியாக்ரபுரம், ஆதி சிதம்பரம், பிரமபுரம்,
சதுர்வேதபுரி, மங்களபுரி முதலியன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்.

     இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று
இப்பெருமான் போற்றப்படுகிறார்.

     சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின்
சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்து கொண்டு இத்தலத்திலேயே
அம்பாளுக்கு வேதப் பொருளை உபதேசம் செய்து, இங்கிருந்த அடியார்
சிவயோகிகள் முதலிய பல்லாயிரவர்க்கும் ஞானோபதேசம் செய்து முத்தி
நல்கி, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப் புராணத்தில்
சொல்லப்பட்டுள்ளது.

     இக்கருத்தை, திருவிளையாடற்புராண, வலைவீசின படலத்துள் உள்ள
பின்வரும் பாடல்கள் நமக்குணர்த்துகின்றன :-

   
 (1)  . . . . . . . . தருமமால் விடைமேல் தோன்றி
       வீண்ணிடை நின்றான் சென்றான் வேத்திரப் படையானோடும்
       உண்ணிறை அன்பரோடும் உத்தரகோச மங்கை.

   (2) அங்கிருந்து அநாதிமூர்த்தி ஆதி நான்மறைகள் ஏத்துங்
      கொங்கிருங்கமலச் செல்விக் குரைகழல் வணங்கிக் கேட்பப்
      பங்கு இருந்தவட்கு வேதப் பயனெலாந்திரட்டி முந்நீர்ப்
      பொங்கிருஞ்சுதை போல் அட்டிப் புகட்டினான் செவிகளார.

   (3) அவ்வேலை அன்புடையார் அறுபதினாயிரவர்க்கும்
                                        அளித்துப் பாச
      வெவ்வேலை கடப்பித்து வீடாத பரானந்த வீடு நல்கி
      மைவேலை அனைய விழி அங்கயற்கண் நங்கையொடு மதுரை
                                               சார்ந்தான்
      இவ்வேலை நிலம்புரக்க முடிகவித்துப் பாண்டியன் என்றிருந்த
                                               மூர்த்தி.”

     இத்தலத்தின் பழமையை உணர்த்துவதாக “மண் தோன்றிய போதே
மங்கை தோன்றியது” என்னும் பழமொழி இப்பகுதியில் வழங்குகிறது.
இத்தலத்தின் வரலாற்றுப் புராணத்தில் இராவணனின் மனைவி
மண்டோதரியின் பெயர் குறிக்கப்படுவதாலும்; சுவாமி மூலத்தான மதிலில்
உள்ள கல்வெட்டுக்களில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்
பட்டிருப்பதாலும், இக்கோயிலின் பழைமை புலனாகிறது.