பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 87


சுந்தரருக்கு இறைவன், கண்ணைத்தராமல்  ஊன்றுகோலை   அளித்தபோது,
சுந்தரர் கோபங்கொண்டு அக்கோலை வீசியெறிய அக்கோல் பட்டு நந்தியின்
கொம்பொடிந்து போனதாகச் செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது. நந்தியின்
பக்கத்தில் கண்ணிழந்த நிலையில் இறைவனை நோக்கியவாறு சுந்தரர்
திருமேனி நின்ற நிலையில் உள்ளது.

     மூலவரின்  பின்னால்  சுவாமி  அம்பாள் பஞ்சலோகத் திருமேனிகள்
வைக்கப்பட்டுள்ளன.  உள்  பிராகாரத்தில்  விநாயகர், வள்ளிதெய்வயானை
சுப்பிரமணியர்,  மகாலட்சுமி சந்நிதிகள் தனித்தனிக் கோயில்களாக உள்ளன.
கோஷ்ட   மூர்த்தங்களாக   விநாயகர்,  தட்சிணாமூர்த்தி. இலிங்கோற்பவர்,
பிரம்மா, துர்க்கை ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதி
உள்ளது.

     திருவிளம்பூதூர் கோயிலில் இருந்த கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டு
இக்கோயிலில் பதிக்கப்பட்டுள்ளன.

     இக்கல்வெட்டுக்கள் முதலாம் இராசராசன் காலத்தியவை. கல்வெட்டில்
இறைவன் பெயர் “ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ஈக்காட்டுக் கோட்டத்துப்
பெருமூர் நாட்டு உடையார், திருவுளோம் போகி உடைய நாயனார்’ என்று
குறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுக்களில்: (1) சந்தி விளக்கு வைத்த நிபந்தம்
(2) பூஜைக்கு நிலம் வைத்த நிபந்தம் (3) சுவாமி அமுதுக்கு நிலம் விடப்பட்ட
நிபந்தம் முதலியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

     சிவராத்திரி, கார்த்திகைச் சோமவாரங்கள் (திங்கட்கிழமைகள்) ஆருத்ரா
முதலிய விசேஷ கால வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இக்கோயில்
திருவேற்காடு அருள்மிகு கருமாரியம்மன் தேவஸ்தானத்துடன் இணைந்தது.

     கோயிலுள்   வெளிப்பிராகாரப்   பகுதியிலேயே   பூஜை   செய்யும்
சிவாசாரியார் வீடு உள்ளது.

     இப்புதிய கோயிலின் நலனில் பெருமுயற்சி கொண்டு திருப்பணிகள்
செய்து கும்பாபிஷேகம் செய்வித்துச்   செம்மைப்படுத்தியவர்  சென்னை
மினர்வா டுடோரியல் கல்லூரி நிறுவனராக இருந்த திரு. A.N. பரசுராமன்
அவர்கள் ஆவார். அவர் ஆர்வமும் அயரா உழைப்பும் இக்கோயிலின்
வளர்ச்சியில் பெரும் பங்காகும். பூண்டி அரங்கநாத முதலியார் என்ற
பெருமகனார் வாழ்ந்தது இப்பதியே.