பக்கம் எண் :

872 திருமுறைத்தலங்கள்


     பின்பு பலராலும் திருப்பணிகள் செய்யப்பட்டு - ஆதிசைவர்கள்
வசமிருந்து பின்னரே இராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.
அதுமுதல் இன்றுவரை இராமநாதபுர சமஸ்தான ஆளுகைக்கு
உட்பட்டதாகவே இருந்து வருகிறது.

     பழமையான திருக்கோயில். முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன.
வலப்பால் கோபுரம் உரிய அமைப்பில் உள்ளது. இடப்பால் உள்ளது
மொட்டையாகக் காட்சி தருகின்றது. வலப்பால் கோபுரமும் மிகப்பழமை -
செங்கல் கட்டமைப்பு - கலசங்கள் இல்லை - ஏழு நிலைகள்.

     இரு வெளிக் கோபுரங்கட்கும் உள்கோபுரங்கள் உள்ளன. வலப்பால்
உள்கோபுரம் ஐந்து நிலைகள். இடப்பால் உள்கோபுரம் மூன்று நிலைகள்.
வலப்பால் உள்ள கோபுரத்தின் முன்னால் நர்த்தன விநாயகர் சுப்பிரமணியர்
தரிசனம். உட்புறம் வலப்பால் குளம். உள்கோபுரம் கண்டு தொழுது
உட்செல்கிறோம். இடப்பால் பிராகாரத்தில் வாகனங்கள். வாயிலைத்தாண்டி
இடப்பால் திரும்பினால் தட்சிணாமூர்த்தி தனியே கால் மேல் கால்
மடித்துப்போட்டு, அபயவரத முத்திரைகளுடன் ஒரு கையையுயர்த்தி ஒரு
கையைத் தாழ்த்தி அமர்ந்து காட்சி தருகின்றார் - சீடர்கள் நால்வருமில்லை.
சிவலிங்க பாணமும் நாகப் பிரதிஷ்டையும் பக்கத்தில் உள்ளன.

     விநாயகரைத் தொழுது பலிபீடம் கொடிமரம் நந்தி இவற்றை
வணங்கியவாறே உள்வாயிலைத் தாண்டி பெரிய மண்டபத்தை அடைகிறோம்.
முதல் தூணில் குவித்த கைகளுடன் சேதுபதி காட்சி தருகிறார். மற்றத்
தூண்களில் பாஸ்கர சேதுபதி, ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி, ராஜேஸ்வர
முத்துராமலிங்க சேதுபதி முதலியோர் கற்சிலைகளாகக் காட்சியளிக்கின்றனர்.

     இங்கிருந்து பார்த்தால் நேரே மூலவர் தரிசனம்.

     பிரகாரச் சுவரில் திருவாசகப் பகுதிகளான பொன்னூசல், நீத்தல்
விண்ணப்பம் முதலியவை கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டு உள்ளன.
தொடர்வது அறுபத்துமூவர் மூலத்திருமேனிகளின் தரிசனம் - சப்த மாதாக்கள்
- முடிவில் விநாயகரும் ரிஷபாரூடரும் காட்சி தருகின்றனர். வலம் முடித்து
துவாரபாலகர்களைத் தொழுது, உட்சென்றால் மூலவரின் அருமையான
தரிசனம். எதிரில் நந்தி தேவர் - நீர் கட்டும் அமைப்பில் அனுக்ஞை
விநாயகரைக் கும்பிட்டு உட்புறமாகப் பார்த்தால் மங்களேசுவரர் மங்கலமாகக்
காட்சியளிக்கிறார் சதுர ஆவுடையார்.