மாணிக்கவாசகரை மனத்தில் நிறுத்தி அந்நினைவோடு வணங்குகிறோம். மதுவளர் பொழில் திருவுத்தரகோசமங்கையுள்ளாய் - எது எமைப்பணிகொளும் ஆறு? என்று வாயாரப்பாடி, நெஞ்சார நினைத்து, கண்ணீர் மல்கக் கசிந்து கை கூப்புகிறோம். மனநிறைவான உணர்வு, (சிவபெருமானுக்குத் தாழம்பூ ஆகாதது, ஆனால் இங்கு அதற்கும் சாப நிவர்த்தி ஏற்பட்டதால் மங்களேசுவரருக்குத் தாழம்பூ சார்த்தப்படுகிறது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.) வெளியே வருகிறோம். அடுத்த தரிசனம் மங்களாம்பிகை. நான்கு கரங்களுடன்
- அபயம் ஒருகரம், ஒரு கரம் தொடையில் நிறுத்தி, இருகரங்களில் தாமரையும், ருத்ராட்சமும் ஏந்தித் தரிசனம் தருகின்றாள். இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம். நடராசாவுக்குரிய ஆறு அபிஷேகக் காலங்களிலும் இச்சந்நிதியில் இறைவன் தாண்டவமாடிக் காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது. பிராகார அழகு இராமேஸ்வரத்தை நினைவூட்டுகிறது. தூண்களில் பிட்சாடனார், ஊர்த்துவர் சிற்பங்கள் உள்ளன. உலா வருவதற்குரிய நடராசத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. வெளிச்சுற்றில் வல்லபை விநாயகரைத் தரிசிக்கலாம். ஆதிசிதம்பரம் எனப்படும் அற்புதத் தனிக்கோயிலை அடுத்துக் காணலாம். நடராசப் பெருமானுக்குத் தனிக்கோயில், கோயிலுக்கு உள்ளேயே குளத்தின் எதிரில் உள்ளது. பலிபீடம், கொடி மரம், நந்தி தொழுது முன்மண்டபம் சென்றால், சேதுபதிகள் வண்ணங்களில் சுதையில் தூண்களில் காட்சியளிக்கின்றனர். சுற்றிலும் அகழி அமைப்பு. எனவே சந்நிதிக்கு உட்செல்ல மரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கு நோக்கிய சந்நிதி. அக்கினி மத்தியில் நடராசப் பெருமான் ஆடுவதாகச் சொல்லப்படுகிறது. அம்பிகைகாண இங்கு அறையில் ஆடிய நடனத்தைத்தான் அம்பலவாணர், தில்லையில் அம்பலத்தில் ஆனாடிர் என்கிறார் ஆலய சிவாசாரியார். இங்குள்ள கூத்தபிரான்- நடராசர் அதி அற்புதமானவர். ஐந்தரை அடி உயரம் - முழுவதும் மரகதத்திருமேனி. விலை மதிப்பிட முடியாத இப்பெருமான் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே அடியவர்க்குக் காட்சியளிக்கிறார். இப்பெருமான் வெளியே உலாவருவதில்லை. பெருமான் திருமேனியை உள்வைத்தே சந்நிதி கட்டப்பட்டுள்ளதால் திருமேனியை வெளிக் கொணரவும் இயலாது. (உலாவருவதற்கான மூர்த்தம் தனியே உள்ளது.) |