மார்கழித் திருவாதிரையில் இப்பெருமானுக்கு மிகப்பெரிய அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. இதைச் செய்பவர்கள் திருப்புத்தூர் வள்ளல் ஆறுமுகம் பிள்ளையவர்களின் குடும்பத்தினர். அன்று ஒரு நாள் மட்டுமே சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிஷேகங்கள் கண்கொள்ளாக் காட்சியாக - அற்புதமாக நடைபெறுகின்றன. வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்நாளில் கட்டாயமாகச் சென்று தரிசிக்க வேண்டும். அபிஷேக ஆராதனைகள் முடிந்த பிறகு மீண்டும் சந்தனக்காப்பு சார்த்தப்படும். அக்காப்பிலேயே அடுத்த மார்கழித் திருவாதிரை வரை பெருமான் காட்சித்தருவார். மார்கழித் திருவாதிரை நாளில் வாய்ப்பும் திருவருள் கூட்டுவிப்பும் உடையோர் அவசியம். சென்று ஆடல் வல்லானைத் தரிசித்து ஆனந்தம் பெறவேண்டும். நாடொறும் உச்சிக் காலத்தில் நடைபெறும் ஸ்படிகலிங்க, மரகதலிங்க, அன்னாபிஷேகம் காணக் கொடுத்து வைக்க வேண்டும். உலகெலாம் மலர் சிலம்படியை, ஒப்பற்ற மரகதச் செல்வரை உள்ளத்திருத்தித் தொழுது பிரிய மனமின்றிப் பிரிந்து முன் மண்டபம் அடைகின்றோம். அங்குள்ள சிறிய மேடையில்தான் உச்சிக்காலத்தில் ஸ்படிக, மரகதலிங்கங்களை வைத்து அபிஷேகம் செய்கின்றனர். அதைத் தரிசிக்கும் போதே வலப்பக்கச் சாளரத்தின் வழியே கைகூப்பிய நிலையில் உள்ள மாணிக்கவாசகரையும், இடப்பால் திரும்பி உமாமகேசுவரரையும் ஒருசேரத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு எண்ணி இன்புறத்தக்கது. உமாமகேசுவரர் சந்நிதிக்குப் படிகளேறிச் சென்று தரிசித்துவிட்டு மறுபுறமுள்ள படிகள் வழியே இறங்கிப் பிராகார வலமாக வந்தால் திருப்பதிகங்கள் எழுதப்பட்டுள்ளவையும், குருந்தமர உபதேசக் காட்சி சந்நிதியும் கண்டு இன்புறலாம். கல்லில் குருந்தமரம் செதுக்கப்பட்டு கீழே அமர்ந்து இறைவன் (குருமூர்த்தமாக) உபதேசிக்க எதிரில் மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சி அற்புதமாகவுள்ளது. மாணிக்கவாசகர் சந்நிதி கண்டு தொழுகிறோம். கோஷ்டமூர்த்தம் ‘ஏகபாத திரிமூர்த்தி’ அருமையானது. நடராசர் கோயிலுக்குப் பக்கத்தில் தனியே சஹஸ்ரலிங்க சந்நிதி உள்ள தனிக்கோயில் உள்ளது. மூலத்திருமேனியில் நெடுக்குக் கீற்றுகள் உள்ளன. சஹஸ்ர எண்ணிக்கையில் - உட்புறத்தில் தலமரத்தின் வேருள்ளது. வியாசரும் காகபுஜண்டரும் இங்குத் தவம் செய்வதாக ஐதீகம். இதன் பக்கத்தில்தான் தலமரமான இலந்தைமரம் உள்ளது. |