பக்கம் எண் :

884 திருமுறைத்தலங்கள்


     ஒன்பதாம் திருமுறையை அருளியுள்ள அருளாளர்களுள்
கருவூர்த்தேவரே அதிகமான பதிகங்களை - பத்துப் பதிகங்களைப்
பாடியுள்ளார்.

     திருவிசைப்பாவில் மட்டும் இடம் பெற்றுள்ள “சாளரபாணி” என்ற பண்
வகையில் பதிகம் ஒன்றை அமைத்துப் பாடியுள்ளவர் பூந்துருத்தி நம்பி காட
நம்பி என்பவரே.  

1. கோயில்

சிதம்பரம்

     (தலவிளக்கம் திருமுறைத்தலங்களின் வரிசையில் உரிய பக்கத்தில்
உள்ளது.)

                  
 பாடல்கள்

     “நீறணி பவளக் குன்றமே ! நின்ற
          நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே
     வேறணிபுவன போகமே ! யோக
          வெள்ளமே மேருவில் வீரா !
     ஆறணி சடைஎம் அற்புதக்கூத்தா !
          அம்பொன் செய் அம்பலத்தரசே !      
     ஏறணி கொடிஎம் ஈசனே ! உன்னைத்
          தொண்டனேன் இசையுமாறு இசையே.”
                                 (திருமாளிகைத்தேவர்)

     “இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும்
          ஏழையேற்கு என்னுடன் பிறந்த
     ஐவரும் பகையே யார்துணை என்றால்
          அஞ்சல் என்றருள் செய்வான்கோயில்
     கைவரும் பழனங் குழைந்த செஞ்சாலிக்
          கடைசியர் களைதரு நீலம்
     செய்வரம்பு அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
          திருவளர் திருச்சிற்றம்பலமே.”
                                  (கருவூர்த்தேவர்)