பக்கம் எண் :

888 திருமுறைத்தலங்கள்


உலா முதலியனவும் பாடப் பட்டன. சேக்கிழார் பெரிய புராணம் பாடுவதற்குத்
தூண்டுகோலாக இருந்த பதி. கோயிலமைப்பு தஞ்சைப் பெருவுடையார்
கோயிலமைப்பை ஒத்துள்ளது. சிற்பக் கலையழகு சிந்தனைக்கும் எட்டாதது.
மூலத்தானத்தைச் சுற்றிப் பல கோயில்கள் இருந்தன. அவை காலப்போக்கில்
அழிந்தன.

     முதலாம் இராசராசன் காலத்திலிருந்து சோழர்களுக்குக் கட்டுப்பட்டிருந்த
பாண்டியர் கி.பி.12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எதிர்த்தெழலாயினர்.
அப்போது சோழமன்னர் பலமுறை பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து
மதுரையை அழித்தனர். இதனால் மனங்குமுறிய பாண்டியர், சோழர்களைப்
பழிவாங்கக் காத்திருந்தனர். மூன்றாம் குலோத்துங்கன் இறந்த பின்பு,
பாண்டியர் சோழ நாட்டின் மீது படையெடுத்து தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக்
கொள்ளலாயினர். முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் சோழநாட்டை
வென்று தன் பேரரசுடன் இணைத்துக் கொண்டான். அக்காலத்தேதான் கங்கை
கொண்ட சோழபுரம் பெருத்த அழிவிற்கு ஆளாயிருத்தல் வேண்டும்.
மாளிகைகள் தரைமட்ட மாக்கப்பட்டன. சோழர்குலம் கி.பி.1279ல் முடிவுறவே
அரண்மனைகள் உட்பட நகரில் இடிந்த கட்டிடங்களின் செங்கற்களை
ஊர்மக்கள் எடுத்துப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதற்கு மேலும்
சென்ற நூற்றாண்டில் மற்றொரு நிகழ்ச்சி ஏற்பட்டது.

     அதாவது, லோயர் அணைக்கட்டில் கொள்ளிடத்திற்குப் பாலம்
கட்டியபொழுது அரசாங்க அதிகாரிகள் கருங்கல்லால் பாலம் கட்டினால்
வலுவாக அமையுமெனக் கருதி, அருகே கருங்கல் கிடைக்காத நிலையில்
கங்கைகொண்ட சோழபுரக் கோவிலில் இடிந்து கிடந்த கற்களை
எடுத்துச் சென்றதுடன் குறையாக நின்ற மதிலையும் இடித்துக் கற்களை
எடுத்தனர். ஊர் மக்கள் அதனை எதிர்த்ததும், வேறு செங்கல் மதிலைக்
கட்டித் தருவதாக அதிகாரிகள் வாக்களித்தனர். ஆனால் பிறகு எதுவும்
நிகழவில்லை.  கோவிலில் இருந்து அகற்றப்பட்ட கருங்கற்களில் பல
கல்வெட்டுக்கள் இருந்தன. அவையாவும் இவ்வாறு அழிந்துவிட்டன.
கோவிலில் எஞ்சி உள்ள கல்வெட்டுக்கள் சிலவே. அவற்றிலும் சில
மிகவும் சிதைந்துள்ளன. கங்கை கொண்ட சோழனின் கல்வெட்டு
ஒன்றுகூட அங்குத் தற்பொழுது காண்பதற்கில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.

     இக்கோயிலில் தற்போது கிடைத்துள்ள கல்வெட்டுக்களில் சிறப்பானது
வீரராசேந்திர சோழனது கல்வெட்டாகும். இதிலிருந்து, இக்கோயிலுக்கு
விடப்பட்டிருந்த ஊர்களிலிருந்து ஆண்டுதோறும் ஒரு